ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
விரைவில் விலை குறையும்: அயோத்தியில் ஸ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டிமுடித்ததும் தக்காளி உட்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக பருவமழை சீராக இல்லாததாலும், விளைபொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லமுடியாத காரணத்தினாலும் இந்தியாவில் காய்கறிகள் விலை அடிக்கடி கூடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ 130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டிமுடித்ததும் தக்காளி உட்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இப்படி ஒரு அறிவாளி தான் நம் இந்தியாவின் நிதியமைச்சர்.
இது எல்லாம் இந்தியாவின் சாபக்கேடு pic.twitter.com/2gOB8fowpg
— Sri Raman (@SriRama53404184) July 1, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தந்தி டிவி இது தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது தொடர்பாக தந்திடிவி சேனலின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், ‘தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை’ என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 01 அன்று நியூஸ் கார்டு ஒன்றை வெளியாகி இருக்கிறது..
அதில் “சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் ரூ15 அதிகரிப்பு. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ75-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ90-க்கு விற்பனை. சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ100 முதல் ரூ120 வரை விற்பனை. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து நிர்மலா சீதாராமன் ஏதாவது செய்திகள் வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில, பரவி வரும் செய்திகள் தொடர்பாக அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதும் உறுதியானது.
இதன் மூலம் “தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட தந்தி டிவியின் நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ‘குடியுரிமை தக்கவைப்பு வரி’ அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்ததாகப் பரவும் போலி செய்தி
மேலும் படிக்க : வெங்காயம் சாப்பிடாததால் கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?
முடிவு:
நம் தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.