நிர்மலா சீதாராமன் தந்தையின் எளிமையான வீடு எனப் பரப்பப்படும் பாரதியாரின் உறவினர் வீடியோ !

பரவிய செய்தி
இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் தன் தந்தையுடன் அவரது வீட்டில். வீட்டை கவனியுங்கள். நம் ஊரில் சாதாரண கவுன்சிலர் பதவியில் இருப்பவர்களின் வீட்டை எண்ணிக் கொள்ளுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என சமூக வலைத்தளங்களை பாஜக ஆதரவாளர்கள் இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில், அமைச்சரின் வீட்டினை பாருங்கள். இதே நமது ஊரில் கவுன்சிலராக இருப்பவரின் வீட்டினை எண்ணிப் பாருங்கள் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் தன் தந்தையுடன் அவரது வீட்டில்.
வீட்டை கவனியுங்கள். நம் ஊரில் சாதாரண கவுன்சிலர் பதவியில் இருப்பவர்களின் வீட்டை எண்ணிக் கொள்ளுங்கள். pic.twitter.com/5GqmAwjauE
— டெல்டா கருடன் என்கிற தனுசுரமான் பாஜக (@Lalitha19010440) January 12, 2023
அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமனை முதியவர் ஒருவர் நாற்காலியில் அமரச் சொல்கிறார். பிறகு நிர்மலா சீதாராமன் சிலரை அம்முதியவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் தன் தந்தையுடன் அவரது வீட்டில்.
வீட்டை கவனியுங்கள். நம் ஊரில் சாதாரண கவுன்சிலர் பதவியில் இருப்பவர்களின் வீட்டை எண்ணிக் கொள்ளுங்கள். pic.twitter.com/cF33gEBDJl
— Ramakrishnan (@Ramakri18836461) January 11, 2023
உண்மை என்ன ?
பரவக்கூடிய வீடியோவில் ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். இது தொடர்பாக ’socialnews.xyz’ என்ற இணையதளத்தில் 2022, டிசம்பர் 3ம் தேதி புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் வீட்டினை பார்வையிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், 2022, டிசம்பர் 4ம் தேதி ‘சுப்பாராவ்’ என்பவர் பரவக்கூடிய வீடியோவை தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது. அதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாரதியாரின் பேரன் கே.வி.கிருஷ்ணனை (96 வயது) வாரணாசியில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/SubbaRaoTN/status/1599309759622307841?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599309759622307841%7Ctwgr%5E92951f06a7f33c0731613cfaee7351866d898bd4%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fen.youturn.in%2Ffactcheck%2Fnirmala-sitharaman-bharathiyars-residence-varanasi.html
இதே வீடியோவை நிர்மலா சீதாராமனும் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதிலும், வாரணாசியில் உள்ள சிவா மடத்திற்குச் சென்று மகாகவி பாரதியின் மருமகன் (தங்கை மகன்) கே.வி.கிருஷ்ணனைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய வீடியோவில் இருப்பது நிர்மலா சீதாராமனின் தந்தையோ, அவரது வீடோ கிடையாது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், நிர்மலா சீதாராமன் தனது தந்தையைச் சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் இருப்பது மகாகவி பாரதியாரின் உறவினரான கே.வி.கிருஷ்ணன் என்பதை அறிய முடிகிறது.