வெங்காயம் சாப்பிடாததால் கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

பரவிய செய்தி
” வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன் ” நிர்மலா சீதாராமன்.
மதிப்பீடு
விளக்கம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, ” நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, ஆகையால் கவலைப்பட வேண்டாம் ” என பேசியதாக ஓர் வீடியோ காட்சி முகநூல் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நிதியமைச்சர் வெங்காய விலை உயர்வு குறித்து கவலையில்லை என தெரிவித்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உண்மை என்ன ?
நாட்டில் வெங்காய விலை கிலோ ரூபாய் 200-ஐ தொடும் அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெங்காயம் விலை உயர்வால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பான விவாதமும் நடைபெற்றது. இதில், நிர்மலா சீதாராமன் பேசிய சிறு வீடியோ காட்சி மட்டுமே பரவி வருகிறது. நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த உரையாடலின் முழு வீடியோவையும் தேடினோம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சூலே, வெங்காய விலை உயர்வு தொடர்பாக தனது கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தார். அப்பொழுது, நிர்மலா சீதாராமன் பேசுவதற்கு தயாராக இருக்கும் பொழுது மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ” நீங்கள் எகிப்து வெங்காயத்தை உண்பீர்களா ? ” (கேள்வி எழுப்பியவர் முகம் காண்பிக்கப்படவில்லை) எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், ” நான் அதிகம் வெங்காயம் , பூண்டு சாப்பிடுவதில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கேன் ” என தெரிவித்து விட்டு எம்.பி சுப்ரியா சூலே-வின் கேள்விகளுக்கு பதில் அளிக்க துவங்கி உள்ளார்.
இந்தியாவிற்கு எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது குறித்து சுப்ரியா சூலே கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு இடையில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் ” நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனவே கவலைப்பட வேண்டாம் ” எனத் தெரிவித்து இருக்கிறார். அந்த இடத்தில், வெங்காய விலை உயர்வுக்கு தாம் கவலைப்படவில்லை என அவர் தெரிவிக்கவில்லை.
Here is the full video of Smt @nsitharaman explaining in detail the steps taken by the govt. to control onion prices and provide relief to the common man. A part of this video clip is being quoted out of context and is misleading. pic.twitter.com/56MLd1gKpU
— NSitharamanOffice (@nsitharamanoffc) December 5, 2019
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிகாரப்பூர்வ அலுவக ட்விட்டர் பக்கத்தில் 4 நிமிட வீடியோவுடன், ” வெங்காய விலையின் உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து உள்ள நடவடிக்கை குறித்து நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தின் முழு வீடியோ. இதில் , சிறு பகுதியை மட்டும் வெட்டி தவறான அர்த்தத்துடன் பரப்பப்பட்டு வருகிறது ” என பதிவிடப்பட்டு உள்ளது.
எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை நீங்கள் உண்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை, ஆகையால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என தெரிவித்த தகவலை, வெங்காய விலை உயர்வு குறித்து கவலை இல்லை என பேசியதாக தவறாக வைரல் செய்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. அங்கும், அதிகம் சாப்பிடுவதில்லை என்றே குறிப்பிட்டு உள்ளார்.