மக்கள் தனி வாகனம் வாங்குவதால் பெட்ரோல் விலை உயர்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினாரா ?

பரவிய செய்தி
மக்களின் பேராசையே காரணம். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் – நிர்மலா சீதாராமன்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விலை உயர்வு காரணமாக ஆளும் பாஜக அரசு மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து உள்ளதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
மார்ச் 26-ம் தேதி, ” விலை உயர்வுக்கு போர்தான் காரணம் தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு போர் சூழலும் ஒரு காரணம் ” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நியூஸ் 7 சேனல் வெளியிட்டு இருக்கிறது.
எரிபொருள் விலை உயர்விற்கு போர் தான் காரணம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான செய்தியை எடிட் செய்து போலியான செய்தியை பரப்பி உள்ளனர். மேலும், இதை நாங்கள் வெளியிடவில்லை என நியூஸ் 7 தமிழ் சேனலும் போலிச் செய்திக் குறித்து தெரிவித்து உள்ளது.
முடிவு :
நம் தேடலில், கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் பொது போக்குவரத்தை புறந்தள்ளி தனி வாகனம் வாங்கும் மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.