நலத்திட்டங்களை ரொக்கமாக வழங்கினால் TDS செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10% பிடித்தம் செய்த பிறகே வழங்கப்படவேண்டும் – நிர்மலா சீதாராமன்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அரசு மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிப்பதற்காக ரூ.7,000 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.
மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்து பதவிக்கு வந்திருந்தால் மக்களின் கஷ்டம் தெரியும்.திருட்டுதாதனமாக வந்தால் இப்படிதாதான் ஏழைகளிடம் பிடித்து அதானிக்கும் அம்பானிக்கும் தருவார்கள்.மக்கள்இதைப் புரிந்து கொள்ள வேண்டும். pic.twitter.com/8UnKnDsnzb
— இரத்தினவேலு வசந்தா. (@vasantalic) July 12, 2023
இந்நிலையில், மாநில அரசு நலத்திட்டங்களை ரொக்கமாக வழங்கினால் TDS (Tax Deducted at Source) ஆக 10 சதவீதம் பிடித்தம் செய்த பிறகே பயனாளிக்கு மீத தொகையை வழங்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அது pic.twitter.com/triAYXMPkt
— 🌷மினி மோகன்🌷 (@Mini52614198) July 13, 2023
இந்த நியூஸ் கார்டினை திமுக ஆதரவாளர்கள் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தும், வலதுசாரிகள் அவருக்கு ஆதரவாகவும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் உள்ள தகவல் குறித்து ஆய்வு செய்தோம். 50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 11ம் தேதி (ஜூலை) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியது தொடர்பாக புதிய தலைமுறை இரண்டு நியூஸ் கார்டுகளை பதிவிட்டுள்ளது. அவற்றில், ‘செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும்’ , ‘ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி’ என்று மட்டுமே உள்ளது. அந்த இரண்டு கார்டுக்கும் ஒரே படத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் அளித்த செய்தியாளர் சந்திப்பு ‘ANI’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
இவற்றில் இருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதும், அது போலியாக எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது என்பதையும் அறிய முடிகிறது. மேலும், ஒன்றிய நிதியமைச்சரும் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க : ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
இதற்கு முன்னதாக நிர்மலா சீதாராமன் குறித்து பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகள் குறித்த உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுளோம்.
மேலும் படிக்க : நிர்மலா சீதாராமன் தந்தையின் எளிமையான வீடு எனப் பரப்பப்படும் பாரதியாரின் உறவினர் வீடியோ !
முடிவு :
நம் தேடலில், மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10% பிடித்தம் செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. அப்படி எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.