This article is from Oct 12, 2018

பொய்யான வாக்குறுதி அளித்தோம் என்றாரா நிதின் கட்கரி.

பரவிய செய்தி

நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்தோம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்.

மதிப்பீடு

சுருக்கம்

மராத்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2014 மகாராஷ்டிரா மாநில தேர்தல் பற்றி தான் கூறியுள்ளார். ஆனால், 2014 நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ராகுல்காந்தி பதிவிட்டது முழு வீடியோவின் சிறு பதிவு மட்டுமே.

விளக்கம்

மத்திய பிஜேபி அரசு தேர்தலில் கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு 15 லட்சம் அளிப்பது, பெட்ரோல் விலைக் குறைப்பு, வரி குறைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என கேள்விகள் மக்கள் மனதில் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு மத்திய பிஜேபி அரசு பொய் வாக்குறுதிகளை அளித்தே ஆட்சியை பிடித்ததாக எதிர் கட்சி உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அக்டோபர் 4-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான புதிய நகைச்சுவை நிகழ்ச்சியானAssal Pavhane Irsal Namune-வில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இதில், பிரபல திரைப்பட நடிகர் நானா படேகர்( காலா பட வில்லன்) இருந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேர்தல் வாக்குறுதி பற்றி நிதின் கட்கரி கூறியதாவது, “  2014 தேர்தலின் போது தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கோபிநாத் முண்டே தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தினர். நாங்கள் வெற்றிப் பெற போவதில்லை என உறுதியாக இருந்தோம். எனவே அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள். நாங்கள் அதற்கெல்லாம் பொறுப்பில்லை, ஏனென்றால் எப்படியும் நாங்கள் வெற்றிப் பெற போவதில்லை. ஆனால், நாங்கள் வெற்றி அடைந்தோம். இப்போது மக்கள் எங்களை பார்த்து தேதியுடன் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்டு கேட்கின்றனர். நாங்கள் இப்போது என்ன செய்வோம். நாங்கள் சிரித்துக் கொண்டே கடந்து செல்கிறோம் ” என மகாராஷ்டிரா மாநில தேர்தல் பற்றி மராத்தி மொழியில் பேசியதை ஆங்கில மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நிதின் கட்கரி பேசிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ சரியாகத் தான் சொன்னீர்கள், தங்கள் நம்பிக்கை மற்றும் கனவை மோடி அரசு சிதைத்து விட்டதாக மக்களும் வருந்தி வருகின்றனர் “ என பதிவிட்டு இருந்தார். உண்மையில், நிதின் கட்கரி நாடாளுமன்ற தேர்தல் பற்றி குறிப்பிடவில்லை. அந்த 34 நொடி வீடியோக்கு பிறகு, ”  நான் என்னால் செய்ய முடியாத வாக்குறுதிகளை தரமாட்டேன். எனக்கு எது சாத்தியமோ அதை மட்டும் தான் கூறுவேன். அதற்கு மட்டும் தான் உறுதி அளிப்பேன் ” என நிதின் கட்கரி கூறியிருந்தார்.

நிதின் கட்கரி போன்றே பிஜேபியின் ராஜ்ய சபா எம்பி சுப்ரமணிய சுவாமி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ மோடியின் அமைச்சர்கள் பொருளாதாரம் பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்கள் “ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதின் கட்கரி விளக்கம் :

நிதின் கட்கரி கூறியது மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பற்றியதே.. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதி என பலரும் புரிந்து கொண்டு உள்ளனர் . சமீபத்தில் இதற்கு நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

” நான் மராத்தி கலர்ஸ் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு தேர்தல் வாக்குறுதி பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநில விதான் சபா தேர்தலில் கோபிநாத் முண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் என்னிடம் சுங்கவரிகளை நீக்குவது பற்றி அறிவிக்கலாம் என கூறினார்கள்.

இதுமாதிரியாக எதையும் அறிவிக்க வேண்டாம் இது நிதி பிரச்சனையை ஏற்படுத்தும் எனக் கூறினேன். இதன் மூலம் பிஜேபி அரசின் ஆட்சி அமையும்  என அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதனை செய்தால், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்( அளித்த வாக்குறுதி)” என்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மோடியின் பெயரை நான் கூறவில்லை. அதேபோன்று 15 லட்சம் பணம் வாக்குறுதி பற்றியும் குறிப்பிடவில்லை. டெல்லியை சேர்ந்த பத்திரிகைகள் முழுமையாக தவறான தகவலை வெளியிட்டு உள்ளனர் என்று நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

பிஜேபி என்று இல்லாமல் தேர்தல் என வரும் போது அனைத்து அரசியல் கட்சியின் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாதவை என்பது மக்களின் மனக்குமுறல்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader