யார் இந்த நித்யானந்த் ஜெயராம் ! கூடங்குளம் போராட்டத்தில் இவரின் பங்கு என்ன ?

பரவிய செய்தி
நித்யானந்த் ஜெயராம் NGO-க்களின் பிரதிநிதியாகச் சுற்றுப்புறச் சூழல் குறித்து பேசுவார் மற்றும் வெளிநாட்டுப் பணத்திற்காக வேலை செய்யும் இவரின் குழுதான் கூடங்குளம் போராட்டத்தைக் கலைத்து விட்டு ஸ்டெர்லைட் போராட்டத்தை நோக்கியும் வருகிறது. மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய ஆலோசராக இருக்கும் நித்யானந்த் ஜெயராமின் திட்டம், கமல்ஹாசனைத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் நாயகனாக சித்தரிப்பதே !
மதிப்பீடு
சுருக்கம்
நித்யானந்த் ஜெயராம் மக்கள் நீதி மய்யத்தில் எத்தகைய பொறுப்பையும் வகிக்கவில்லை. இவரை பற்றி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயக்குமார் அவர்களே தெளிவாக கூறியுள்ளார்.
விளக்கம்
கொசஸ்தலை ஆற்றில் அனல் மின்நிலையக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கமல்ஹாசன் கள ஆய்வை மேற்கொண்டார். இதில், கமல்ஹாசனுடன் சென்னையைச் சேர்ந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராம் அவர்களும் கலந்து கொண்டார்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய ஆலோசராக இருப்பதாகவும், கமல்ஹாசனைத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் நாயகனாக சித்தரிப்பதே நித்யானந்த் ஜெயராமின் திட்டம் என்றும் சமூக வலைத்தளத்தில் ஓர் செய்தி பரவுகிறது. NGO-க்களின் பிரதிநிதியாகச் சுற்றுப்புறச் சூழல் குறித்து பேசுவார் மற்றும் வெளிநாட்டுப் பணத்திற்காக வேலை செய்யும் இந்த குழுதான் கூடங்குளம் போராட்டத்தைக் கலைத்து விட்டு ஸ்டெர்லைட் போராட்டத்தை நோக்கியும் வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நித்யானந்த் ஜெயராம் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கார்ப்ரேட்களுக்கு எதிரான கூட்டமைப்பான “ வெட்டிவேர் கூட்டமைப்பு ” எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 1989-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்று துறைச் சார்ந்த வேலை செய்வதை விரும்பாமல் புதுவிதமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.
தனது மேற்படிப்பை கடல் கடந்து சென்று படிக்க விரும்பிய ஜெயராம், அதற்காக அமெரிக்காவில் உள்ள சில பல்கலைகழகங்களில் முயற்சித்தார். பின் ஒஹியோ பல்கலைகழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் அலாஸ்கா பகுதிக்கு சென்று சாலமன் மீன்பிடி காலத்தில் கப்பலில் வேலை செய்து வந்துள்ளார். பின் பல பகுதிகளுக்கு சென்றபின் இறுதியாக ஹாங்காங்கில் வர்த்தக வெளியீடு சார்ந்த நிறுவனத்தில் ஆசியாவின் எடிட்டர் ஆக இரண்டு வருடம் பணிபுரிந்தார். பல நாடுகளில் பல வேலைகள் செய்தும் தாம் செய்து வந்த வேலைகள் மனதுக்கு திருப்தி அளிக்காததால் இந்தியாவில் சுற்றுலா குறித்த எழுத்தாளராக ஆக வேண்டும் என நினைத்து இந்தியா செல்ல முடிவெடுத்தார். இந்தியாவில் அவரின் முதல் கட்டுரையாகத் தஞ்சாவூரில் இறால் மீன்வளர்ப்பு பற்றியது அமைந்தது. அதன் பின்னர் கடல்சார்ந்த மற்றும் மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் பற்றி கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.
1995-ல் நீர் மாசுப்படுதல் குறித்த கட்டுரையை எழுத போபால் சென்றுள்ளார். கிணற்றில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது விஷ வாயுத் தாக்கியதால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக நலப்பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகம் நேரத்தை செலவழித்தார். நியாயமான பத்திரிகையாளராக இருந்தாலும் நடுநிலைவாதியாக இருப்பதை அவர் விரும்பவில்லை என்று பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்தியாவில் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளூர் மக்களாலே அதை சரி செய்வதற்கு சில அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். எனினும், 2004-ல் தன்னார்வ அமைப்புகளுடன் செயல்பட்டு வந்த தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கார்ப்ரேட்களுக்கு எதிரான கூட்டமைப்பான வெட்டிவேர் கூட்டமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பானது கூடங்குளம் அணுஉலை போராட்டம், கொடைக்கானல் தொழிற்சாலையில் மெர்குரி நச்சால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பின் போதும், மேட்டூரில் மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் போன்ற பல விஷயங்களில் உதவி புரிந்து உள்ளனர்.
நித்யானந்த் ஜெயராம் சுற்றுப்புறச் சூழல் குறித்த கட்டுரைகளை பல இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் எழுதி வருகிறார். 2013-ல் செய்யூர் பகுதியில் தொடங்க இருந்த மின் திட்டம் மற்றும் அதற்காக கடற்கரையில் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்பரேட் நிறுவனங்கள் செய்து வரும் மனித உரிமை மற்றும் சுற்றுப்புறச் சூழல் அத்துமீறல்களை விசாரணை செய்து அறிக்கை அளித்தும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பத்திரிகையில் எழுதி வரும் நித்யானந்த் ஜெயராம் அவர்களை வெளிநாட்டு பணத்திற்காக வேலை செய்பவர் என்றும், கமலை ஸ்டெர்லைட் போராட்டத்தின் தலைவனாக உருவாக்க எண்ணுவதாகவும் கருதித் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நித்யானந்த் ஜெயராமின் குழுவே கலைக்க உதவி செய்ததாகப் புரளியைப் பரப்பி வருகின்றனர். ஆனால், கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நித்யானந்த் ஜெயராம் மற்றும் அவரின் குழு உதவி புரிந்ததாக பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப.உதயக்குமார் அவர்களே கூறியுள்ளார். நித்யானந்த் ஜெயராம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கும், நீண்ட காலமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் மறுப்பு தெரிவித்தும் , இது தவறான தகவல் என்றும் கூறியுள்ளார். ஆக, இத்தகைய தவறான குற்றச்சாட்டை சுமத்துவது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமனை கொச்சைப்படுத்தும் செயலாகும்.