சென்னை நொச்சிக்குப்பத்தில் இடிக்கப்பட்ட மீன் கடைகள் எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
நொச்சிக்குப்பம் மீனவர் கடைகள் திருட்டுத்தனமாக திமுகவால் இடிக்கப்பட்டது! மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏதாவது செய்வாரா?Archive link
மதிப்பீடு
விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில், நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலை உள்ளது. அச்சாலையை மீனவர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, ஒரே நாளில் தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதி (பொறுப்பு) T. ராஜா கூறுகையில் “இந்த மீனவர்களை பொது சாலையில் குத்த வைத்து உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” எனக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் அங்கிருந்த கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவ மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மீனவர்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைத்துத் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நொச்சிகுப்பம் மீன் கடைகள் திமுக ஆட்சியால் இடிக்கபட்டது pic.twitter.com/G5CBsBFUwI
— சவுக்குசங்கர் ஆர்மி நெல்லை (@SANGI_MANGI_) April 30, 2023
இந்நிலையில் நொச்சிக்குப்பம் மீனவர்களின் கடைகள் திமுக அரசால் இடிக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்றினை நாம் தமிழர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், கடற்கரை ஓரம் கட்டிடம் இடிக்கப்பட்டது போன்று கற்குவியல் உள்ளது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2019ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நொச்சிக்குப்பம் லூப் சாலை தொடர்பாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்திகளை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் பரவக் கூடிய புகைப்படம் உள்ளது.
அப்புகைப்படம் குறித்து மேற்கொண்டு தேடியதில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி “Marina Loop Road a dumping yard for debris” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெரினா லூப் சாலையில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அப்பகுதி மீனவ பெண்மணி தாமரை என்பவர் “மீன் கடைகள் மற்றும் பொருட்கள் மட்டுமே எங்களுக்குச் சொந்தமானவை. கட்டிடக் கழிவுகள் குறித்து எங்களுக்குத் தெரியாது” எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்க கே.பாரதி கூறியதும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது, மீன் விற்பவர்கள் கடைகளை அமைக்க ஏதுவாக சாலைக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட தாழ்வான பகுதியைச் சமன் செய்வதற்காக இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளைக் கொண்டுவந்தனர். மாநகராட்சியின் ஆட்சேபனை காரணமாக அதனை நிறுத்திவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து நொச்சிக்குப்பதில் சாலையோர மீன் கடைகளை திமுக அரசு அகற்றியதாகப் பரவக் கூடிய புகைப்படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம், லூப் சாலையில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், திமுக அரசு நொச்சிக்குப்பத்தில் மீனவர் கடைகளை அகற்றிவிட்டதாகப் பரவக்கூடிய புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. அப்புகைப்படம் 2019ம் ஆண்டே லூப் சாலை தொடர்பாக வெளியான வெவ்வேறு செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.