நொச்சிக்குப்பம் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு.. திமுக அரசின் சதி என திசை திருப்பும் ஹெச்.ராஜா !

பரவிய செய்தி
சென்னை நொச்சிக் குப்பத்தில் உள்ள இந்து கோவிலை இடிக்க இந்து விரோத திமுக அரசு முயல்வது வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும் – ஹெச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள கங்கா பவானி அம்மன் கோயிலை இடிக்க ஜேசிபி இயந்திரத்துடன் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிந்த போது, கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ” நொச்சிக்குப்பத்தில் உள்ள இந்து கோவிலை இடிக்க இந்து விரோத திமுக அரசு முயல்வதாக ” பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
நொச்சிக்குப்பத்தில் உள்ள கங்கா பவானி அம்மன் கோவிலை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே கோவிலை அகற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர்.
2004-ம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் போது கங்கா பவானி அம்மன் கோவில் சேதம் அடைந்ததால், சில ஆண்டுகள் கரையில் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அதன்பின்னர், கோவில் இருந்த பழைய இடத்தின் அருகிலேயே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது.
நொச்சிக்குப்பம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள கோவிலானது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பொது இடத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறி அப்பகுதியில் வசிக்கும் அஞ்சலை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அஞ்சலை தொடர்ந்த வழக்கில், நொச்சிக்குப்பம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற 2021 ஜூன் 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ் செல்வி ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவுப் பிறப்பித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரபின்படி, ஜேசிபி இயந்திரத்துடன் கோவிலை அகற்ற சென்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம், கொரோனா காலக்கட்டத்தில் நீதிமன்றத்தில் இணைய வழியில் வழக்கு நடந்ததால், வழக்கின் விவரம் குறித்து அறிந்து கொள்ள முடியவில்லை என்றும், இதுதொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதுவரை கால அவகாசம் அளிக்கும்படி மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கோவிலை அகற்ற மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது பாஜக துண்டு அணிந்து வந்த நபரை மக்கள் அனுமதிக்காமல் வெளியேறச் சொன்னதாகவும், காவலர்கள் அவரை வெளியேற்றியதாகவும் நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?
தமிழ்நாட்டில் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அகற்ற நீதிமன்றங்கள் அளிக்கும் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை பார்த்து வருகிறோம். இதற்கு முன்பாக, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 150 கோவில்களை இடித்துள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள கோவிலை இடிக்க சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆனால், திமுக அரசு கோவிலை இடிக்க முயல்வதாக ஹெச்.ராஜா திசை திருப்புகிறார் என அறிய முடிகிறது.