பாஜக தலைவர்கள் பகிர்ந்த நொய்டா விமான நிலைய வீடியோவில் சீனா, தென் கொரியா படங்கள் !

பரவிய செய்தி
பிரதமர் நரேந்திர மோடி ஆசியாவின் மிகப்பெரிய நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவார். பல அம்சங்களைப் பெருமையாகக் கொண்ட இது இந்தியாவின் முதல் நிகர பூஜ்ஜிய மாசு உமிழ்வு விமான நிலையமாக இருக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
நவம்பர் 25 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ஜெவார் அருகே, நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வையொட்டி, அரசாங்க சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல பாஜக தலைவர்கள் இரண்டு விமான நிலையங்களின் ஏரியல் காட்சியைக் காட்டும் படங்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்தனர்.
உண்மை என்ன?
நொய்டா விமான நிலையம் என்று பகிரப்பட்ட ஒரு புகைப்படம் தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் இரண்டின் புகைப்படம். மற்றோரு புகைப்படம் சீனாவில் உள்ள பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படம்.
இவ்விரு வேறு விமான நிலையங்களின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை நொய்டா விமான நிலையம் என ப்ளூ டிக் வாங்கிய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்கள் பகிர்ந்துள்ளன.
‘mygovindia’ பக்கம் முதலில் இந்த வீடியோவை பதிவிட, அதனை தொடர்ந்து mygovhindi, கேஷவ் பிரசாத் மௌரியா, அனுராக் தாகூர், அர்ஜுன் ராம் மேகவால், ப்ரஹலாத் சிங் படேல், அன்னபூர்ணா தேவி, பங்கஜ் சிங், சுனில் யாதவ், ஆகிய சமூக வலைதள பக்கங்களும் பகிர்ந்துள்ளன.
ஷென் ஷெய்வெய் என்ற சீனா அரசுடன் இணைந்த ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “சீன பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படங்களை இந்திய அரசு அதிகாரிகள் தங்கள் ‘உள்கட்டமைப்பின் சாதனைகளுக்கு’ சான்றாக பயன்படுத்த வேண்டியிருந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியாக உள்ளது” என்று தவறான பதிவுகளின் புகைப்பட தொகுப்பை பகிர்ந்துள்ளனர்.
முடிவு
தென் கொரியா மற்றும் சீனாவில் உள்ள விமான நிலையங்களின் படங்கள் உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் விமான நிலைய திட்டத்திற்கான பிரதிநிதி படங்களாக பல்வேறு அரசாங்க சமூக ஊடக கணக்குகள் மற்றும் பிஜேபி தலைவர்களால் பகிரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.