ஒரே நேரத்தில் 15 தலைவர்களை வரைந்த பெண் கின்னஸ் சாதனை படைத்ததாக தவறானச் செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ்

பரவிய செய்தி
சாதனை பெண்ணுக்கு உதவ முன்வரும் ஆனந்த் மகேந்திரா ! ஒரே நேரத்தில் 15 தலைவர்களை 15 பேனாக்களை கொண்டு வரைந்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா நாட்டைச் சேர்ந்த 15 தலைவர்களின் படங்களை இளம்பெண் ஒருவர் ஒரே நேரத்தில் வரையும் காட்சி சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகப் பரவி வருகிறது. மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இளம்பெண் வரையும் வீடியோவை பகிர்ந்து அப்பெண்ணுக்கு உதவி செய்யத் தயார் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
How is this even possible?? Clearly she’s a talented artist. But to paint 15 portraits at once is more than art—it’s a miracle! Anyone located near her who can confirm this feat? If valid, she must be encouraged & I’d be pleased to provide a scholarship & other forms of support. pic.twitter.com/5fha3TneJi
— anand mahindra (@anandmahindra) October 27, 2022
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், Ajay Meena Artist எனும் யூட்யூப் பக்கத்தில் 2022 அக்டோபர் 25ம் தேதி அன்று 15 Drawing together with 1 hand world record எனும் தலைப்பில் அப்பெண் வரையும் வீடியோ முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
வைரலான வீடியோவில் இருப்பவர் உத்தரபிரதேச மாநிலம் விஜய் நக்லா கிராமத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பது தெரியவந்தது. அப்பெண்ணின் யூட்யூப் பக்கமான Noorjahan Artist பக்கத்திலும் வைரலான வீடியோ அக்டோபர் 27ம் தேதி அன்று 15 drawing ek sath world record // 1 hath se 15 drawing எனும் தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியின் உண்மையை அறிய கின்னஸ் உலகச் சாதனையின் அதிகாரபூர்வ இணையத்தில்(Guiness World Record) அப்பெண்ணின் வரைதல் குறித்து தேடியதில், அவ்வாறு எந்தச் சாதனையும் படைக்கப்பட்டதாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும், தற்பொழுது வைரலான வீடியோவை முதலில் பதிவேற்றம் செய்த Ajay Meena Artist எனும் யூட்யூப் பக்கத்தில் உள்ள வீடியோவின் நிலைத்தகவலில்(Description) இது கின்னஸ் சாதனை படைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 15 தலைவர்களின் படங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டது என்ற கூற்றின் உண்மையை அறிய இணையத்தில் தேடியபோது, இதேபோல் வரையப்படும் பல வீடியோக்கள் கிடைத்தன.
அவற்றில் பேனாக்கள் வெவ்வேறு நீளத்தில் கட்டப்பட்டும், சில வீடியோக்களில் தனித்தனியாக படங்களை வரைந்து எடிட் செய்து ஒரே நேரத்தில் வரைவதாக காட்டப்படுகிறது. எனினும், வைரல் செய்யப்படும் வீடியோவில் 15 படங்கள் ஒரே நேரத்தில் வரையப்பட்டதா, இல்லையா என நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அனுஷ்கா படம் :
இளம்பெண் வரைந்த 15 தேசியத் தலைவர்களின் புகைப்படங்களில் ராணியின் புகைப்படமாக இருப்பது நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்தின் போஸ்டரை தழுவி வரையப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், இளம்பெண் ஒருவர் ஒரே நேரத்தில் வரைந்த 15 தலைவர்களின் படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது என நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தி தவறானது. அந்த பெண் அப்படி எந்த கின்னஸ் சாதனையையும் படைக்கவில்லை என அறிய முடிகிறது.