வடஇந்தியர்கள் அரிசியில் கலப்படம் செய்வதாகப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மக்கள் உண்ணக்கூடிய அரிசியில் கலப்படம் செய்வதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோவில், அரிசி குடோன் ஒன்றில் குவிக்கப்பட்டுள்ள அரிசியில் எண்ணெய் போன்ற ஒன்றை கலந்து ஊற்றுவதும், பலரும் தங்களது கை மற்றும் கால்களால் கலப்பதும் என காட்சிகள் நீளுகிறது. அதன் பிறகு, அந்த அரிசி மூட்டைகளை தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
வடஇந்தியர்களை குறிப்பிட்டு பரப்பப்படும் இவ்வீடியோ குறித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆகையால், இது எங்கு நடந்தது, இவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற அரிசி மூட்டைகளில் ” Casserita ” என எழுதி இருப்பதை நம்மால் காண முடிந்தது. Casserita அரிசி பிராண்ட் நிறுவனம் பெரு நாட்டைச் சேர்ந்தது, இந்தியாவைச் சேர்ந்தது அல்ல.
இதை மையப்படுத்தி வீடியோ குறித்து தேடுகையில், 2019 அக்டோபர் 11-ம் தேதி லத்தீன் அமெரிக்க பத்திரிகை எனும் யூடியூப் சேனல் ஒன்றில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
2018-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்ட இவ்வீடியோ உடன், பெருவின் லிமாவில் “லா கேஸெரிட்டா” பிராண்ட் வெள்ளை அரிசியில் சாயம் கலப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.
வெள்ளை அரிசியில் எண்ணெய் போன்ற ஒன்றைக் கலந்து பழுப்பு நிற அரிசியாக மாற்றுகிறார்கள் எனத் தோன்றுகிறது. இதுதொடர்பாக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும், இது பெரு நாட்டைச் சேர்ந்த பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.
முடிவு :
நம் தேடலில், வட இந்தியர்கள் அரிசியில் கலப்படம் செய்வதாக வைரல் செய்யப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அது பெரு நாட்டைச் சேர்ந்த கேஸெரிட்டா எனும் பிராண்ட் அரிசியாகும். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவ்வீடியோ பெரு நாட்டைக் குறிப்பிட்டு வைரல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.