நார்வேயில் ஆப்பிள்களை வேலியில் மாட்டி இலவசமாக வழங்கும் பழக்கம் உள்ளதா ?

பரவிய செய்தி
நார்வே நாட்டில் உள்ள மக்கள் ஆப்பிள்களை அறுவடை செய்து, அவற்றை அவர்களுக்கு உரிய வேலிகளில் மாட்டி விட்டு செல்கின்றன . அவை , ஏழைகள் , பசியில் இருப்பவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக பழங்கள் கிடைக்கின்றன. ஆப்பிள்கள் வீணாகி போவதற்கு பதிலாக கடைபிடிக்கப்படுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
நார்வே நாட்டின் இனிமையான ஆப்பிள் கதையை நீங்கள் கேட்டு இருப்பீர்களா என தெரியவில்லை. ஆனால், அக்கதையும், வேலியில் ஆப்பிள்கள் மாட்டி இருக்கும் புகைப்படங்களும் உலக அளவில் சமூக வலைதளங்கள், இணையதள பக்கங்களில் வைரலாகியவை. இன்றும், அவை பரவி வருபவை.
ஒருவரின் வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் மர வேலியில் கிலோ கணக்கில் இருக்கும் ஆப்பிள்களின் பிளாஸ்டிக் பைகள் தொங்கவிடப்பட்டு இருக்கின்றன. ஏனென்றால், நார்வே நாட்டில் அறுவை செய்யப்படும் ஆப்பிள்களை உரிமையாளர்கள் இப்படி மாட்டி விட்டு செல்கின்றனர். ஏழைகள், பசியில் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும் என்ற நோக்கத்தில் இப்படியான நடைமுறை நார்வே நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுவதாக கூறி இருந்தனர்.
எனினும், சில பதிவுகளில் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள்களின் எண்ணிக்கை டன் கணக்கில் அதிகம் என்பதால் உபரியாக இருப்பதை யாருக்காவது உதவும் என இப்படி வேலியில், பொது இடங்களில் வைத்து விடும் பழக்கம் இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
உண்மை என்ன ?
நார்வே நாட்டின் ஆப்பிள் கதை குறித்து தேடிய பொழுது, நார்வே நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனமான ” Drammens Tidende ” -யில் 2018 செப்டம்பர் 14-ம் தேதி ” Inger gives free apples to passersby: – Many people ask “can I really take”? ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில், இணையத்தில் வைரலாகும் ஆப்பிள்களை தொங்கவிட்டு இருக்கும் வீட்டு உரிமையாளர் குறித்து விரிவாக இடம்பெற்று உள்ளது.
” வீட்டின் உரிமையாளர் Inger Garas என்பவர் கடந்த ஓராண்டில் மட்டும் கிலோ கணக்கில் ஆப்பிள்களை கொண்ட 200 பைகளை இப்படி அளித்து இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து Inger Garas கூறுகையில், ஒவ்வொரு பையிலும் கிலோ கணக்கில் ஆப்பிள்கள் அடங்கிய 30 பைகளை மாட்டி விடுவேன், அவற்றை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் அங்கிருந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த ஆண்டில், அதிக அளவில் அழகாக, சுத்தமான மற்றும் பெரிய வடிவில் ஆப்பிள்கள் கிடைத்தன. அவற்றை முழுவதுமாக நான் பயன்படுத்தப்போவதில்லை. அவற்றை முழுவதுமாக தூக்கி எறிவதற்கு பதிலாக இப்படி கொடுப்பது நல்லது ” .
Garas தன் வீட்டில் உள்ள மர வேலியில் ஆப்பிள் பைகளை மாட்டி விடுகிறார். ஒவ்வொரு கிலோ கொண்ட 200 பைகளை இப்படி விநியோகம் செய்துள்ளதாகவும், தாம் வசித்து வரும் வீடு ஏராளமான ஆப்பிள் மரங்களை கொண்ட மிகப்பெரிய பகுதி மற்றும் அம்மரங்கள் 1850-களில் நடப்பட்டவை என்றும் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
மிகப்பெரிய ஆப்பிள் மரங்கள் அதிகம் கொண்ட பகுதியில் வசித்து வரும் Garas தன் வீட்டில் உள்ள மர வேலியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆப்பிள்களை மாட்டி விடுவது வழக்கம். இதையே Drammens Tidende செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. மற்றபடி, நார்வே நாட்டின் மக்கள் அனைவரும் இப்படியொரு நடைமுறையை கொண்டு உள்ளதாகவோ அல்லது உற்பத்தி செய்யப்படும் உபரி பழங்களை இப்படி அளிப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. இவை ஒருவர் செய்து வந்த நல்ல பழக்கம்.
இப்படி பதிவான புகைப்படத்தின் கமெண்ட்களில் போலந்து , ஜெர்மனி என தங்களின் நாட்டில் உள்ள சிலர் வீட்டின் வெளியே பழங்களை பைகளில் வைப்பதாக புகைப்படங்கள் பதிவிட்டுக் கொள்கின்றனர். இது ஒரு நல்ல பழக்கம் எனக் கூறலாம். பயன்படாமல் தூங்கி எறியும் பழங்களை இலவசமாக வழங்குவது நல்ல காரியமே.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, நார்வே நாட்டில் அறுவடை செய்த ஆப்பிள் பழங்களை ஏழைகள், பசியில் இருப்பவர்களுக்கு வழங்கும் பொதுவான பழக்கம் இருப்பதாக கூறுவது தவறான தகவல்.
Inger Garas என்பவர் தன்னுடைய வீட்டில் பழமையான மரங்களில் இருந்து கிடைக்கும் உபரி ஆப்பிள் பழங்களை தன் வீட்டின் மர வேலியில் மாட்டி விடுகிறார். ஒருவர் செய்த செயல் நாடு முழுவதும் இருக்கும் பழக்கம் எனத் தவறாக பகிரப்பட்டு உள்ளது.