நோட்டாவுக்கு 35% ஓட்டு விழுந்தால் தேர்தல் வெற்றி செல்லாதா ?

பரவிய செய்தி

தேர்தலில் நோட்டா 35% ஓட்டுகளுக்கு மேல் வாக்கு பதிவாகி இருந்தால் அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று இருந்தாலும் அது செல்லாது. அதன் பின்னர் ஆறு மாதம் குடியரசு தலைவர் ஆட்சி அமல்ப்படுத்தப்படும்.

மதிப்பீடு

சுருக்கம்

நோட்டாவிற்கான சட்ட விதிமுறைகளில் பரவும் செய்திகளில் இருப்பது போன்று எதுவும் குறிப்பிடவில்லை.

எனினும், நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது.

விளக்கம்

இந்தியத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க விரும்பில்லை என்றால் ” None Of The Above ” எனும் NOTA பட்டன் அளிக்கப்பட்டு வருகிறது. நோட்டா மீதான மக்கள் கவனம் அதிகரித்து வருகிறது.

Advertisement

அதே நேரத்தில் நோட்டா மூலம் என்ன பயன் கிடைக்கும் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அதில், தேர்தலில் 35% க்கும் அதிகமான ஓட்டுகளை நோட்டா பெற்று விற்றால் தேர்தலில் வெற்றிப் பெற்றவரின்  வெற்றி ரத்து செய்யப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, ஆறு மாதங்களுக்கு பிறகு மறுத்தேர்தல் நடத்தப்படும். குறிப்பாக, ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்ற தகவல் அனைவராலும் அதிகம் பார்க்கப்பட்டது.

49-O : 

Conduct of Election Rules 1961 ” -ல் உள்ள section 49-O மூலம் வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்கு செலுத்த மறுப்பு தெரிவிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்காக படிவம் 17A மூலம் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். எனினும், இதன் மூலம் மிகப்பெரிய தாக்கம் இல்லாமல் இருந்து வந்தது.

இதையடுத்து,  2013-ல் இந்திய உச்ச நீதிமன்றம் நோட்டா ஓட்டுக்கான விருப்பத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அளிக்க வேண்டும் என உத்தரவை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்தது. இதன் மூலம் வாக்காளர்களின் விவரங்களும் பாதுகாக்கப்பட்டது.

Advertisement

2013-க்கு பிறகு 31 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடளுமன்றத் தேர்தலிலும் நோட்டா பட்டன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015-ல் நோட்டாக்கு என்று ஒரு குறியீடும் அளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற வழக்கு : 

2017 நவம்பரில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் Ashiwni Upadhyay தன் மனுவில், ” தேர்தலில் அதிக அளவில் நோட்டா வாக்குகளைப் பெற்று இருந்தால், அது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

இது நடந்தால், முடிவு செல்லாது என்ற தீர்மானம் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்க வேண்டும் என ” தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , ” நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு அதிகம் செலவாகும். ஆகையால், தேர்தலில் மக்கள் ( None Of The Above ) நோட்டாவிற்கு அதிக வாக்குகள் செலுத்தினாலும் புதிய தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனக் கூறி பொதுநல வழக்கை நிராகரித்தார்.

இதன் காரணமாக Ashiwni Upadhyay தனது மனுவை திரும்ப பெற்று, தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாக ஹிந்து செய்தியில் வெளியாகி உள்ளது.

நோட்டாவால் என்ன மாற்றம் நிகழும் : 

நோட்டா பல தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகளை மாற்றி அமைத்து இருக்கிறது. ஒரு தொகுதியில் நோட்டா 3,000 வாக்குகள் பெற்றால், அந்த தொகுதியில் தோல்வி அடைந்தவரின் வெற்றிக்கான வாக்கு ஆயிரத்தில் இருக்கும். பல தொகுதிகளில் வெற்றிகள் நோட்டா வாக்குகளால் மாறுவதை பார்க்கலாம்.

ஒரு தொகுதியில் நோட்டாக்கு 35% வாக்கை செலுத்தி தேர்தலை நிறுத்தி மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் எனக் கூறுபவர்கள் அந்த தொகுதியில் தகுதியான வேட்பாளரை நிறுத்தி வெற்றிப்பெற செய்ய நினைக்கலாம்.

இந்தியாவில் நோட்டாவிற்கு விழும் வாக்குகள் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோட்டா பெறும் ஓட்டு சதவீதம் 2018-ல் 0.8% என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டாவால் தேர்தலில் வெற்றிகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறவே வாய்ப்புகள் அதிகம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button