ஜனவரி 1 முதல் கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
” இந்தியாவில் 2021 ஜனவரி 1 முதல் மூன்றாம் தரப்பு யுபிஐ(Unified Payments Interface-UPI) கட்டண ஆப் பயன்பாட்டிற்கு 30 சதவிகித கேப்(CAP) கட்டணம் விதிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்(National Payments Corporation of india-NPCI) முடிவு செய்துள்ளது. இது 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் ” என நாளிதழில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை வெளியிட்டது யார் எனத் தேடிய போது, தீக்கதிர் எனும் இணையதளத்தில் இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
நவம்பர் 5-ம் தேதி இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ” யுபிஐ ஒரு மாதத்திற்கு 2 பில்லியன் அளவிற்கு பரிவர்த்தனைகளை எட்டியுள்ளதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியத்துடன், யுபிஐ-ல் செயலாக்கப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளில் 30% கேப்(CAP)-ஐ வெளியிட்டுள்ளது. இது அனைத்து மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களுக்கும் பொருந்தும். முந்தைய மூன்று மாதங்களில்(சுழற்சி முறையில்) யுபிஐ-யில் செயலாக்கப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் அளவு அடிப்படையில் 30% கேப் கணக்கிடப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் பொருள், கூகுள் பே, போன் பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள்(டிபிஏ) வழங்குநர்களால் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனை செயல்முறைகளின் மொத்த அளவுகளில் 30% அளவிற்கு மட்டுமே அடுத்த மாதத்திற்கு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிர்ணயம் விதிக்கப்பட்டு உள்ளது.
2016- பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதையே அரசும் ஊக்கப்படுத்தியது. இந்தியர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவை மூலம் அதிக அளவில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள்.
இந்திய யுபிஐ அமைப்பில் கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய இரண்டு நிறுவனங்களே தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இவ்விரு செயலிகளும் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையில் தலா 40 சதவீதத்தை கொண்டு உள்ளன. மீதமுள்ள 20 சதவீதத்தை பேடிஎம் மற்றும் மொபிகுவிக் ஆகியவைக் கொண்டுள்ளன.
புதிய நடவடிக்கையால், மூன்றாம் தரப்பு செயலிகள் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொண்ட பரிவர்த்தனையில் 30% அளவிற்கு மட்டுமே அடுத்த மாதம் பரிவர்த்தனை செயலாக்க வேண்டும். இது சுழற்சி முறையில் நடைபெறும். 30% கேப் என்பது பயனர்கள் கட்ட வேண்டிய கட்டணம் அல்ல.
இருப்பினும், ஒரு மூன்றாம் தரப்பு செயலியின் கட்டாய அளவு வரம்பான 30 சதவீதத்தை எட்டிய பிறகு என்ன நடக்கும் என்று என்பிசிஐ தெளிவுப்படுத்தவிலை. இந்த நடவடிக்கையால் கூகுள் பே, போன் பே மற்றும் பிற பரிவர்த்தனை செயலிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பயனர்கள் சந்திக்கும் தோல்வி அடைந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயரக்கூடும். இது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும்.
யுபிஐ(UPI) அல்லது கட்டண செயலிகள் (Gpay, Phonepe, Amazon pay, BHIM UPI) மூலம் ஒரு மாதத்திற்கு 20க்கும் மேல் பரிவர்த்தனை செல்லும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி,.எச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி போன்றவை ரூ.1,000 வரை ரூ.2.50 மற்றும் ரூ.1000க்கு மேல் பரிவர்தனை செய்ய ரூ.5 வசூலிக்கின்றன.
எனினும், யுபிஐ அல்லாமல்(20க்கும் மேல்) கூகுள் பே வழியாக நடக்கும் எந்தவொரு பரிவர்தனைகளுக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கபடமாட்டாது என google support தளத்தில் கூறியுள்ளனர். என்பிசிஐ-யின் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கையில் இன்னும் தெளிவான விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றாலும், 30% என்பது கேப் மட்டுமே. அது பயனர்களுக்கான கட்டணமல்ல.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.