நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் கூறியதா ?

பரவிய செய்தி
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்கள் – தேர்தல் ஆணையம்.
மதிப்பீடு
விளக்கம்
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையை அறிமுகம் செய்து இருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக இப்பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சீமான் அரசியல் எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இப்பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
தமிழக சட்டசபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 12 முதல் 19-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 தினங்கள் விடுமுறை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
இப்படி இருக்கையில், எதை வைத்து 234 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பார்கள். குறிப்பாக, தேர்தல் ஆணையம் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடவும் செய்யாது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுவில் குறிப்பிட்ட விவரங்களை வழங்கி இருப்பார்கள். அதை வைத்தே ஏடிஆர் போன்ற அமைப்புகள் பகுப்பாய்வு செய்து கட்சி அடிப்படையில் வேட்பாளரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடுவார்கள்.
சரி, கடந்த தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களின் அடிப்படையில் இப்படியொரு தகவலை பரப்பி வருகிறார்கள் என்றால், அதுவும் தவறான தகவலே.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஏடிஆர் அமைப்பு பகுப்பாய்வு செய்து வெளியிட்ட விவரங்களை தி ஹிந்து செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 23% பேர் கிரிமினல் வழக்குகளும், 9% பேர் தீவிர குற்ற வழக்குகள் கொண்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களின் விவரங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் மீது வழக்குகள் இருப்பதை காணலாம். போராட்டம், தனிநபர் பிரச்சனை என ஒருவரின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், குற்ற பின்னணியே இல்லை என சொல்வது தவறான தகவல்.
முடிவு :
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்ததாக பரவும் தகவல் போலியானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.