லஞ்சம் வாங்கி கைதான ஊராட்சி மன்ற தலைவர் நாம் தமிழர் கட்சி என ஊடகங்களில் வெளியான தவறான செய்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் என்பவர் லஞ்சம் வாங்கியதற்காக லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் எனத் தினமலர், சன் நியூஸ், நியூஸ் 18 தமிழ்நாடு, குமுதம், தினகரன், தமிழ் முரசு போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
அதே நேரத்தில் அரங்கநாதன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.
இந்த பொழப்புக்கு ரோட்டுல போற நாலு பேர் கிட்ட ஆரஞ்சி மிட்டாய் வாங்கி சாப்பிடலாம்டா…! pic.twitter.com/UiOzee4GNf
— நெல்லை செல்வின் (@selvinnellai87) July 28, 2023
உண்மை என்ன ?
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் மேற்கொண்டு வரும் நிகமத்துல்லா என்பவர் சீவாடி கிராமத்திற்கு உட்பட்ட மனை எண் 140-ல் உள்ள 474 சதுர அடி மற்றும் மனை எண் 141-ல் உள்ள 602 சதுர அடி உள்ள மனைகளில் வீடு கட்டுவதற்காக, சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால், அனுமதி வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் தாமதப்படுத்தியதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் நிகமத்துல்லா புகார் அளித்தார். காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பதாரர் அரங்கநாதனிடம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து, அதனை அவர் வாங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் அரங்கநாதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி கொடி கம்பத்தின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் திமுகவை சேர்ந்தவர் என சில படங்களை நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் அரங்கநாதன் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஆய்வு செய்தோம். சீவாடி ஊராட்சியைச் சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினரின் மகன் சதீஷ் வளவன் (விசிக) என்பவரை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில் அரங்கநாதன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.
சதீஷ் வளவன் கூறியது : “ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் தான். அவர் ஆன்லைனில் திமுக உறுப்பினராக பதிவு செய்து வைத்திருந்தார். அனைத்து கட்சியினரின் வாக்கும் வேண்டும் என்பதற்காக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற பிறகு முழுமையாக தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். ஊருக்கான பெயர்ப் பலகையில் அவரது பெயர் திமுக கொடி நிறத்திலேயே எழுதப்பட்டிருக்கும்.
நாம் தமிழர் தோழர்கள் அரங்கநாதன் வெற்றி பெற ஆதரவு தெரிவித்து உதவி செய்தார்கள். ஆனால், அவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல” என்று கூறினார்.
2021 ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரங்கநாதனின் வேட்புமனுவில் ” சுயேட்சை “ வேட்பாளராக போட்டியிடுவதாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.
சீவாடி ஊராட்சியின் தலைவராக அரங்கநாதன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் குடும்ப நிகழ்ச்சியில் அரங்கநாதன் கலந்து கொண்டுள்ளார்.
#நவம்பர். 27/ 2022 இன்று
(நாம் தமிழர் கட்சியை) சார்ந்த
(இலத்தூர்(வ)ஒன்றிய பொருளாளர்) #சீவாடி கிராமத்தை சேர்ந்த
தோழர். #சசிகுமார் அவர்களின்
துணைவியார் –#ஒமேனா அவர்களுக்கு#பூமுடிப்பு விழாவில்
(தலைவர்)
திரு.#அரங்கநாதன் அவர்களுடன்
கலந்து கொண்டு வாழ்த்தியபோது@ponnivalavanch1 pic.twitter.com/tBkzj7IIxh— சீவாடி- சதீசுவளவன் (@sathishvalavank) November 28, 2022
அதே போல் சீவாடி ஊராட்சி பெயர்ப் பலகையில் அரங்கநாதனின் பெயர் திமுக கட்சியின் கொடியில் உள்ள கருப்பு சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. அது மட்டுமின்றி அவரது லெட்டர் பேடிலும் திமுக என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலும் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பிரிவு செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்கைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியது, “ஆரம்பக் காலத்தில் அரங்கநாதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் நெருங்கிய நட்புறவில் இருந்தார். ஆனால், அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்ததில்லை. ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற பிறகு அவர் திமுகவில் இணைந்துவிட்டார்” எனக் கூறினார்.
இவற்றில் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அரங்கநாதன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வருகிறது.
முடிவு :
நம் தேடலில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ள சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.