சீமானிடம் கேள்வி கேட்ட நிருபர் சிராஜிதீன் விசிகவைச் சேர்ந்தவர் எனத் தவறான நபரின் படத்தை பரப்பும் நாதகவினர் !

பரவிய செய்தி
பத்திரிக்கையாளர் முகமூடி மாட்டிகிட்டு வந்து நேற்று மிதிவாங்கிய சிறுத்தைகுட்டி சிராஜிதீன் இவன்தான்..
மதிப்பீடு
விளக்கம்
கும்பகோணத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாலைமலர் செய்தியின் நிருபர் கேள்வி எழுப்பிய போது அவரிடம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், “பேர் என்ன? சிராஜிதீனா? அப்போ நீ அப்டி தான் பேசுவ?” என்று பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பத்திரிகையாளர்கள் மத்தியிலும், சிறுபான்மையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாலைமலர் நிருபர் சிராஜிதீன் விசிக கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் அவருடைய புகைப்படத்தை பரப்பியும், அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் நிருபர் சிராஜிதீனா என்பது குறித்து அவருடைய முகநூல் பக்கமான கட்டிமேடு சிராஜிதீன் விசிக என்ற பக்கத்தில் ஆய்வு செய்தோம்.
அதில் அவர் மாலைமலரில் பத்திரிகையாளராக வேலை செய்ததற்கான எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே அவருடைய அதிகாரப்பூர்வ எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் ஆய்வு செய்தோம். செப்டம்பர் 28 அன்று நாம் தமிழர் கட்சியினர் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பரப்புவது குறித்து அவர் தமிழ்நாடு காவல்துறையினரை டேக் செய்து பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.
இரண்டு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial பத்திரிக்கையாளர் நோக்கி உங்கள் பெயர் என்ன? பத்திரிக்கையாளர் பதில் சிராஜிதீன் அப்போது அப்படி தான் பேசுவ என்று சொன்னார் (1) @chennaipolice_ @tnpoliceoffl @U2Brutus_off pic.twitter.com/7DDXaZDcBC
— SIRAJUDEEN KMD (@SIRAJUDEENKMD) September 28, 2023
அதில் “இரண்டு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் நோக்கி உங்கள் பெயர் என்ன?, பத்திரிக்கையாளர் பதிலுக்கு சிராஜிதீன். அப்போது அப்படி தான் பேசுவ என்று சொன்னார். இன்று நாம் தமிழர் கட்சியினர் சிலர் என்னுடைய முகநூல் பக்கத்தையும் என்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்து மிகவும் மோசமான பதிவுகளை பரப்புகிறார்கள். நான் தான் அந்த பத்திரிக்கையாளர் என்று பதிவு செய்கிறார்கள். இதனால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளேன். இதைப் போன்ற பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆதாரங்கள் கீழே இணைத்துள்ளேன் நன்றி..” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்
இதுகுறித்து விசிக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், “அது தவறான செய்தி. அந்த நிருபர் விசிகவைச் சேர்ந்தவர் அல்ல. விசிகவைச் சேர்ந்தவரின் படத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர் “ எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: 3,000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் : சீமான்.. துறைமுகம் மற்றும் தளி தொகுதி !
இதற்கு முன்பும் நிருபர் சிராஜிதீனிடம் ‘3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் ‘ என சீமான் ஆவேசமாக பேசியதை ஆய்வு செய்தும் நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், சீமானிடம் கேள்விக் கேட்ட நிருபர் சிராஜிதீன் ‘விசிக கட்சியைச் சேர்ந்தவர்’ என்று பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், சமூக ஊடகங்களில் பரவி வரும் விசிக கட்சியைச் சேர்ந்த சிராஜிதீனும், நிருபர் சிராஜிதீனும் வெவ்வேறு நபர்கள் என்பதையும் அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
மேற்கொண்டு நிருபர் சிராஜிதீன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. அது தவறான செய்தி. நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை. 23 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறேன். நான் குறிப்பிட்ட கட்சியில் இருக்கிறேன் என்றால் அதற்கான உறுப்பினர் அட்டையை அவர்கள் காண்பிக்கட்டும் ” எனப் பதில் அளித்து இருந்தார்.