நாம் தமிழர் நிகழ்வில் கொளத்தூர் மணி கலந்து கொண்டதாகத் தவறாகச் செய்தி வெளியிட்ட தினத்தந்தி !

பரவிய செய்தி

கருப்பூரில் மாவீரர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த பொது எடுத்த படம். அருகில் கொளத்தூர் மணி உள்பட பலர் உள்ளனர். – தினத்தந்தி சேலம் பதிப்பு (28.11.2022)

மதிப்பீடு

விளக்கம்

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் கடந்த 27ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமையின் ஒருங்கிணைப்பில் மாவீரர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்குத் தலைமை ஏற்றார்.

Archive news link 

அந்நிகழ்ச்சி குறித்து 2022, நவம்பர் 28ம் தேதி வெளிவந்த தினத்தந்தி சேலம் பதிப்பில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் புகைப்படத்தின் கீழேயும், விரிவான செய்தியிலும் அந்நிகழ்ச்சியில் திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ?

விடுதலைப் புலிகள் அமைப்பு ஈழப் போரில் இறந்த தங்களது படை வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாள் அனுசரித்து வந்தது. இந்நிகழ்வு தமிழ்நாட்டிலும் அனுசரிப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாவீரர் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டதாகத் தினத்தந்தி வெளியிட்ட செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். தினத்தந்தியைத் தவிர வேறு எந்த செய்தியிலும் இது குறித்து செய்தி வெளியாகவில்லை.

கடந்த 27ம் தேதி நாம் தமிழர் கட்சி சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 28ம் தேதி புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் கொளத்தூர் மணி கலந்து கொண்டதாக எந்த பதிவும் இல்லை.

மேலும், இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்  தலைவர் கொளத்தூர் மணியின் டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 27ம் தேதி, கொளத்தூர் புலியூரில் வீரவணக்கம் செலுத்தியபோது உடன் தோழர் திருமாவளவன், வன்னி அரசு” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

அதேபோல், கொளத்தூர் பேருந்து நிலையம் அருகே மாவீரர் நாள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது எனக் கொளத்தூர் மணி டிவீட் செய்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்ததாக உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி என்னைப் பற்றி தமிழ்ச் சமூகம் தவறுதலாகவும், இழிவாகவும், கேவலமாகவும் கருதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி இருக்கிறது. அச்செய்திக்கு மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் என்றும், தவறான செய்தியைக் கொடுத்த செய்தியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ” நவம்பர் 28ம் தேதி கொளத்தூர் மணி ட்வீட் செய்துள்ளார்.

 

இதேபோல், தினத்தந்தியின் செய்தி குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெற்றி குமரன் நவம்பர் 29ம் தேதி ட்விட்டர் பக்கத்தில், “எனது படத்தைப் போட்டு கொளத்தூர் மணி கலந்து கொண்டதாகத் தவறாகச் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இத்தனை ஈழ உறவுகளின் அழிவிற்குக் காரணமான இனத்துரோகிகளோடு கைகோர்த்து நிற்பவரோடு என்னை ஒப்பிட்டு செய்தி வெளியிட்ட தினத்தந்தியை வன்மையாகக் கண்டிப்பதோடு மாற்றுச் செய்தியை வெளியிடவும் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கொளத்தூர் மணி கலந்து கொள்ளாத ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதாகவும், உறுதிமொழி எடுத்ததாகவும் தவறான செய்தியைத் தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது. 

முடிவு : 

நம் தேடலில், நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்ததாகத் தினத்தந்தி வெளியிட்ட செய்தி உண்மையல்ல. தினத்தந்தி தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறது என அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader