“நான் மலையாளி” என சீமான் மேடையில் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி
நான் மலையாளி தான்… சீமான்Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ், தமிழர் எனப் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழரே அல்ல என்கிற கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதுண்டு.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், நீ ஏன் இனம் மாறுற, அதுலையே ஏமாத்துறல. நீ ஏன் இனம் மாறுற, நீ தமிழன் என சொல்றதுக்கு உனக்கு என்ன தேவை இருக்கு எனக் கூறுகிறார்.அடுத்ததாக மேடையில் சீமான் பேசுகையில், என்னையே கேள் நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன் ” எனப் பேசுகிறார். இவ்விரண்டு வீடியோக்களும் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
நான் ஒரு மலையாளி தான்…. சீமான் pic.twitter.com/yEvCfEmh07
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) November 30, 2021
” நான் மலையாளி என்று தான் சொல்வேன் ” என சீமான் பேசும் வீடியோ பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பப்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
உண்மை என்ன ?
சீமான் மேடையில் மலையாளி எனப் பேசும் வீடியோ குறித்து நாம் தமிழர் கட்சியின் யூடியூப் சேனலில் தேடுகையில், 2016ம் ஆண்டு மதுரையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசிய முழு வீடியோ கிடைத்தது. வைரல் வீடியோவின் பகுதியும், மதுரை கூட்டத்தின் வீடியோவின் பகுதியும் ஒன்றாக இருப்பதை அறிய முடிந்தது.
மேற்காணும் வீடியோவில் சீமான் பேசுகையில் 19.20வது நிமிடத்தில், ” நான் என்னமோ புதுசா தமிழர் நாட்டை தமிழர் ஆளனும் சொல்றதா.. நீ கேளு கேரளாவை ஆண்டுக் கொண்டிருக்கும் ஐயா உம்மன்சாண்டிக் கிட்ட கேளு. அவர் சொல்றாருல, வெறிக்கொண்டு அந்த நாட்டின் இளைஞர்கள் அதிகாரத்தைக் கேட்டு வருகிறார்கள். இதை நான் சொல்லல, அவர் சொல்லுறாரு. அவர்கள் அதிகாரத்தைக் கேட்பது சரிதான், அவர்கள் நிலத்தை அவர்கள் தான் ஆள வேண்டும் என்று அவர் சொல்றாரு.
என்னையே கேள் நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன். ஒரு தமிழன் முதலமைச்சராகி அந்த நாட்டை ஆளுகின்றான் என்றால் அவன் பதவி ஏற்கும் விழாவில் என்னை அழைக்கவில்லை என்றாலும் முன்வரிசையில் இருந்து வாழ்த்துவேனு சொல்றாரு. அந்த உணர்வு உங்க எல்லாருக்கும் வரணும் ” எனப் பேசி இருக்கிறார்.
கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாக சீமான் பேசிய வீடியோவில் இருந்து நான் மலையாளி என்று தான் சொல்வேன் எனப் பேசிய பகுதியை மட்டும் எடிட் செய்து தன்னையே கூறியது போல் பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் எனப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : தேள் கடித்த உடன் தண்ணீரில் கை வைத்தால் விஷம் இறங்கிவிடுமா ?
இதற்கு முன்பாக, சீமான் பேசிய பொய்கள் குறித்தும், அவருக்கு எதிராக பரப்பப்பட்ட பொய்கள் குறித்தும் யூடர்ன் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன் என சீமான் பேசியதாகப் பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாக சீமான் பேசியதை தவறாகப் பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.