மாதர் சங்கம் பெண்களின் பிரச்சனைகளுக்குப் போராடவில்லை எனப் பொய் சொன்ன சாட்டை துரைமுருகன்!

பரவிய செய்தி
தர்மபுரியில் 6 குறவர் சமூக பெண்களை ஆந்திர காவல் துறையினர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிராக மாதர் சங்கம் போராடவில்லை.
ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி மரணத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் குரல் கொடுத்த போது மாதர் சங்கம் எங்கே சென்றது?
பொள்ளாச்சியில் பாலியல் ரீதியாகப் பெண்களைத் துன்புறுத்திய வீடியோ ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் துங்க விடாமல் செய்தபோது மாதர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? – சாட்டை துரைமுருகன், காளியம்மாள்
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்புகார் தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீமான் மீதான புகார் குறித்து உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சென்னை காவல் ஆணையரகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
மாதர் சங்கத்தினரின் இம்மனுவுக்கு எதிர்வினையாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் ‘தம்பி’ என்னும் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் “தர்மபுரியில் (கிருஷ்ணகிரி மாவட்டம்) 6 குறவர் சமூக பெண்களை ஆந்திர காவல் துறையினர் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்றுள்ளது. அவர்களது பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிராக மாதர் சங்கத்தினர் போராடவில்லை.
கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி மரணத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் குரல் கொடுத்த போது மாதர் சங்கம் எங்கே சென்றது? பொள்ளாச்சியில் பாலியல் ரீதியாகப் பெண்களைத் துன்புறுத்திய வீடியோ ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூங்க விடாமல் செய்தபோது மாதர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?” எனப் பேசியுள்ளார்.
அதாவது இந்த பிரச்சனைகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எந்தவித போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பதே சாட்டை துரைமுருகனின் வாதம். மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரும் இதே கருத்துக்களை வேறொரு வீடியோவில் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புளியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், பெண்கள் உள்ளிட்டோரை ஆந்திர மாநில காவல் துறையினர் விசாரணை என்கிற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிராகத் ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க’ மாநில தலைவா் டில்லி பாபு தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி 2023, ஜூன் 21ம் தேதி ‘மாலை மலர்’ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினரும் பங்கெடுத்துள்ளனர். இது தொடர்பான செய்தியும் 2023, ஜூன் 27ம் தேதி வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மகளிர் பிரிவுதான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். அதே போல் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் CPIM-ன் ஒரு கிளை பிரிவு.
அடுத்ததாக 2022, ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாகச் செய்தி ‘தினத் தந்தி’ தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதியும் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் யூடியூப் பக்கங்களில் உள்ளன.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்படப் பல பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தொடர்பான வீடியோக்கள் 2019, மார்ச் மாதம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ள செய்திகளைக் காண முடிகிறது..
இவற்றிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மாதர் சங்கம் குறித்துப் பேசிய 3 விஷயங்களும் பொய் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் காளியம்மாள், மாதர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாணவி, பொள்ளாச்சி பெண், கிருஷ்ணகிரி குறவர் சமூக பெண்களுக்காகப் போராடவில்லை எனக் கூறியது பொய்யான தகவல். அத்தகைய சம்பவங்களுக்கு அவர்கள் போராடியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
திருத்தம் :
இக்கட்டுரையில் மாதர் சங்கம் பற்றி சாட்டை துரைமுருகன் பேசிய அதே தவறான தகவலை காளியம்மாளும் பேசியதாக குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், பெண்களின் உரிமைக்காக போராடும் ஜனநாயக மாதர் சங்கம் 2 ஆண்டுகளாக மௌனித்து இருந்தார்கள் என்றும், முன்பு பெண்களுக்காக போராடியவர்கள் என ஒவ்வொரு சம்பவத்தையும் குறிப்பிட்டு அவர்கள் போராடியதாகவே பேசி இருக்கிறார். ஆகையால், காளியம்மாள் பற்றிய தவறான தகவலை திருத்திக் கொள்கிறோம்.