ஒபாமா நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்கிறாரா ?| ஃபேஸ்புக் வதந்தி.

பரவிய செய்தி
நூறு வயதானாலும் பதவி வெறி பிடித்து அலையும் நம்மூர் அரசியல்வாதிகளிடையே பதவியை முடித்து விட்ட பிறகு ஒபாமா 5 நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்யும் காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்க ஐக்கிய ஒன்றியத்தின் அதிபராக இருந்த பாரக் ஒபாமா தனது பதவி காலத்திற்கு பிறகு நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்வதாக, ஒபாமா உணவு பரிமாறும் வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. Jo என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ 4 ஆயிரம் ஷேர்களை பெற்றும் , பிற குழுக்களில் பதிவான வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேராகிக் கொண்டிருக்கிறது . இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்வதாக கூறுவது நம்பக்கூடிய வகையில் இல்லை. இது தொடர்பாக, ” Obama Serving food ” என்ற வார்த்தையைக் கொண்டு தேடிய பொழுது இதேபோன்று சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.
அதில், வைரலாகும் வீடியோவின் 1.08 நிமிட வீடியோவானது 2016 நவம்பர் 28-ம் தேதி ABC நியூஸ் சேனலில் “Obama Serves Thanksgiving Meal at Armed Forces Retirement Home ” எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராக் ஒபாமா அதிபராக இருந்த பொழுது வாஷிங்டன் டிசி-யில் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்களின் இல்லத்தில் நன்றி தெரிவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட விருந்தில் , தன் கையால் வீரர்களுக்கு உணவு பரிமாறிய சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்பொழுது தவறாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இந்திய அளவில் தவறாக வைரல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, 2015-ல் நண்பர்களுடன் விருந்து என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா தன் கையால் நண்பர்களுக்கு உணவினை மாறி இருக்கும் வீடியோ CNN செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
யூடர்ன் உடைய தேடலில் இருந்து, அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா நட்சத்திர ஓட்டலில் சர்வராக பணிபுரிவதாக வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. அந்த வீடியோ 2016-ல் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட விருந்தில் உணவு பரிமாறிய பொழுது எடுக்கப்பட்டவை .