ஒடிசாவில் விபத்து நடந்த இரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
இதுவரை, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர். பஹானாகா நிலையம். இந்த நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதில் இருந்து முகமது ஷெரீப் அகமது தலைமறைவாக உள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் இரயில் நிலையம் அருகில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டத்தில் இருந்து முகமது ஷெரீப் அகமது தலைமறைவாக உள்ளார். ஒருவர் எந்த வேலையைச் செய்பவராக இருப்பினும் முதலில் அவரது பெயரைப் பார்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Dr. அம்பேத்கார் முன்பே முஸ்லிம் சமுதாய த்துக்கு இரணவம்& மத்திய மாநில அரசு வேலை வழங்க கூடாது என்றார்…இதுவரை, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர். பஹானாகா நிலையம். இந்த pic.twitter.com/cw6S2dfP2j
— anantham (@ananthamharshi) June 6, 2023
Dr. அம்பேத்கார் முன்பே முஸ்லிம்சமுதாயத்துக்கு இராணுவம்& மத்தியமாநில அரசுவேலை வழங்ககூடாது என்றார்.
விபத்துநடந்தரயில்நிலையத்தின் ஸ்டேஷன்மாஸ்டரின் பெயர் *முகமதுஷெரீப்அகமது*.விபத்துகுறித்து விசாரிக்கஉத்தரவிடப்பட்டதில் இருந்து *முகமது ஷெரீப் அகமது* தலைமறைவாக உள்ளார்.😠 pic.twitter.com/uHgRIGhQ67
— HINDUSTHANI (@RudramurthiMur4) June 6, 2023
அதாவது முஸ்லீம் ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்ததினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒருவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் குறித்துத் தேடினோம். ஒடிசாவை மையமாக கொண்டு செயல்படும் கலிங்கா டிவி எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து நடந்த நிலையத்தில் பணியிலிருந்த அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் எஸ்.பி.மொகந்தி (Mohanty) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘OTV’ என்னும் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் 2.50வது நிமிடத்தில் பஹானாகா பஜார் இரயில் நிலைய பணியாட்கள் குறித்த ‘Nominal Roll’ என்னும் பட்டியல் காண்பிக்கப்படுகிறது. அதிலும், எஸ்.பி.மொகந்தி என்றுதான் உள்ளது. முகமது ஷெரீப் அகமது என்ற பெயரும் இப்பட்டியலில் இல்லை.
இவற்றிலிருந்து விபத்து நடந்த போது பணியிலிருந்த அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது அல்ல என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாகப் பரவக் கூடிய புகைப்படத்தில் பழைய டெலிபோன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் மூலம் அது தற்போது எடுக்கப்பட்ட படம் அல்ல என்பதை அறிய முடிகிறது.
அப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், ‘Vikaschander’ எனும் தளத்தில் அப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘2004 மார்ச் பாரத் வோஹ்ராவும் நானும் KK லைன் – கொத்தவலசா முதல் கிராண்டுல் வரை செல்ல முடிவு செய்தோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்படம் 2004ல் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
மேலும், ரயில்வே எப்படி வேலை செய்கிறது என்பதை ஒரு நீண்ட பதிவாக ‘Rahul Shirbhate’ என்பவர் Quora-வில் பதிவு செய்துள்ளார். அதிலும் தற்போது வைரலாகக் கூடிய படம் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகக் கூடிய படத்தில் இருப்பது பஹானாகா பஜார் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த இஸ்கான் கோவிலை மசூதி என வதந்தி பரப்பிய வலதுசாரிகள் !
ஒடிசா ரயில் விபத்தையொட்டி பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : ஒடிசா இரயில் விபத்து : எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
முடிவு :
நம் தேடலில், ஒடிசா ரயில் விபத்து நடந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகமது ஷெரீப் அகமது இல்லை. அவரது பெயர் எஸ்.பி.மொகந்தி (Mohanty) என்பதை அறிய முடிகிறது.