ஒடிசா இரயில் விபத்து : எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி
“ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை. அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை.” – எடப்பாடி பழனிசாமி
“ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள் இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதே. இன்னமும் இந்த சிறு விவகாரத்தை ஏன் ஊதி பெரிதாக்குகிறீர்கள்? மோடிஜி என்ன கடவுளா விபத்தை நினைத்த மாத்திரத்தில் தடுத்து நிறுத்த?” – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஜூன் 02 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில், இதுவரை 275 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 1000 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே தடம்புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று (ஜூன் 05) ரயில் சேவை மீண்டும் அங்கு தொடங்கப்பட்டது.
மேலும் இதுவரை 78 பேரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய இரயில்வேத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் “ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை. அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை” என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையும் கருத்து தெரிவித்ததாக மாலைமலர் மற்றும் புதியதலைமுறையின் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
அண்ணோவ் மோடி ராஜினாமா செஞ்ச அந்த பதவிக்கு நீங்க தான் சரியான ஆளுன்னு சொல்லிக்கறாங்க.
இப்ப சொல்லுங்கன்னா மோடி ராஜினாமா பண்ணனுமா வேண்டாமா
ESP Mind Voice : நிஜமாவா நான்தான் பொருத்தமான ஆளா அப்படினா சரி
300+ மக்களை கொன்ற மோடி கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் . pic.twitter.com/ccbKPnbFIt
— Sri Raman (@SriRama53404184) June 4, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ்கார்டுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலில் மாலை மலர் தமிழ் செய்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், நேற்று (ஜூன்05) அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக் கூறியதாக எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதுகுறித்து தேடியதில், கடந்த ஜூன் 01 அன்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக மாலை மலர் செய்தி “மேகதாது அணை விவகாரம்- கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.” என்னும் தலைப்பில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.
மேகதாது அணை விவகாரம்- கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.
மேலும் படிக்க : https://t.co/t0duP2xpKY@EPSTamilNadu #Edappadipalaniswami #EPS #ADMK #Karnatakagovt #Congress #Siddaramaiah #DKShivakumar #Mekatadu #Mekatadudam #Karnataka #Tamilnadu #MMNews #Maalaimalar pic.twitter.com/YE2no3WhPR
— Maalai Malar தமிழ் (@maalaimalar) June 1, 2023
இதன் மூலம் கடந்த ஜூன் 01 அன்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதே போன்று, புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை தொடர்பான செய்தி குறித்து தேடியதில், நேற்று (ஜூன்05), “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும்” என்று அவர் கூறியதாக எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் நேற்று (ஜூன்05), “மதுக்கடைகளால் தொடர்ந்து உயிர் பலி: அண்ணாமலை” எனும் தலைப்பில், “அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து
ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வேண்டும் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி, பாசி மிதப்பதாக செய்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது; மதுரையில் டாஸ்மாக் மது குடித்த ஒருவர் மயங்கி விழுந்து பலி; மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி” என்று அவர் கூறியதாக வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது.
மதுக்கடைகளால் தொடர்ந்து உயிர் பலி – அண்ணாமலை #TASMAC | #Annamalai | #TNGovt pic.twitter.com/myxWOfMXc2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 5, 2023
இதன் மூலம் இந்த நியூஸ் கார்டையும் எடிட் செய்து தவறான செய்திகளுடன் பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த இஸ்கான் கோவிலை மசூதி என வதந்தி பரப்பிய வலதுசாரிகள் !
இதற்கு முன்பும், ஒடிசா ரயில் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த போலியான செய்திகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: செங்கோல் ஒப்படைத்த பிறகு ரயில் விபத்து, மரணங்கள் நிகழ்வது பேரழிவைக் குறிக்கிறது என ஆதீனம் கூறினாரா ?
முடிவு:
நம் தேடலில், “ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை. அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், “ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம் தான், இதை ஏன் ஊதி பெரிதாக்குகிறீர்கள்?” என்று அண்ணாமலை கூறியதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் கார்டுகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.