ஒடிசாவில் பிணத்தை பார்சல் செய்யும் முறை என பரவும் புகைப்படங்கள் உண்மையா ?

பரவிய செய்தி

பிணத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல கை, கால்களை ஒடித்து மடக்கி ஒடிசாவில் பார்சல் செய்யும் முறை..பதற வைக்கிறது.

மதிப்பீடு

சுருக்கம்

இறந்தவரின் உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல கை, கால்களை ஒடித்து மடக்கி மூட்டை கட்டவில்லை. இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது, எப்படி உயிரிழந்தார் என்பதை விரிவாக படிக்க.

விளக்கம்

டிசா மாநிலத்தில் இறந்தவரின் பிணத்தை கிராமத்திற்கு கொண்டு செல்ல உடலின் கை, கால்களை ஒடித்து மடக்கி பார்சல் செய்வதாக ஒரு புகைப்படங்கள் இந்தியா செய்திகள் என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலும் இறந்த உடலை பார்சல் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

ஹிந்தியில் பரவும் பதிவுகளில், ” ஒடிசாவில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் அளிக்காத காரணத்தினால் இறந்த பெண்ணின் உடலை அவரின் கணவர் மற்றும் மகன் இணைந்து கை, கால்களை ஒடித்து மடக்கி கிராமத்திற்கு கொண்டு செல்ல பார்சல் செய்து கொண்டிருக்கின்றனர். இது உண்மையெனில் நிலவை அடைந்து என்ன பயன் ” என குறிப்பிட்டு இருந்தன.

உண்மை என்ன ?

தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், புகைப்படம் குறித்த செய்தி 2016 ஆகஸ்ட் 27-ம் தேதி one india ஹிந்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது உண்மை. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்தது. மேலும், படத்தில் இருப்பது இறந்தவரின் கணவர், மகன் அல்ல. மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து one india ஹிந்தி பிரிவு மட்டுமின்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்திய டுடே மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட முதன்மை செய்தி ஊடகங்களில் 2016-ல் விரிவான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நடந்தது என்ன ?

2016 ஆகஸ்ட் மாதம் 80 வயதான சலமணி பஹீரா என்பவர் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தார். சோரோ பகுதியில் மருத்துவமனை வசதியில்லை. ஆனால், அவரின் உடல் அருகே இருந்த சோரோ சமூதாய மருத்துவ மையத்திற்கு(CHC) எடுத்துச் செல்லப்பட்டது.

உடற்கூறாய்வு செய்வதற்கு இறந்த உடலை 30 கி.மீ தொலைவில் இருக்கும் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அந்நேரத்தில் சோரோ ரயில்வே காவல் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் ருத்ர மிஸ்ரா, இறந்த உடலை எடுத்து செல்ல ஆட்டோரிக்ஸாவை கேட்ட பொழுது 3,500 ரூபாய் கேட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு 1,000-க்கு மேல் செலவிட முடியாத காரணத்தினால் வேறு வழியின்றி சோரோ CHC ஊழியர்களை கொண்டு அவ்வாறு எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

சோரோ சமூதாய மருத்துவ மையத்தில் ஊழியர்கள் இருவர் இறந்த பெண்ணின் கை, கால்களை ஒடித்து மடக்கி, சாக்கு மூட்டையில் வைத்து கட்டியுள்ளனர். பின் மூட்டையை மூங்கில் கம்பில் கட்டி ஊழியர்கள் இருவரும் தோள்களில் சுமந்து சென்ற காட்சிகள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் உடலானது 2 கி.மீ தொலைவில் இருந்த ரயில் நிலையத்தில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, 2016-ல் ஒடிசாவில் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தவரின் உடலை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடலை ஒடித்து மூட்டையில் கட்டிய எடுத்துச் சென்றப் புகைப்படங்களே தற்பொழுது வைரலாகி வருகிறது.

இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முறையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தினால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்தியாவில் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாத காரணத்தினால் இறந்தவரின் உடல்களை தோள்களில் தூக்கிச் செல்வது போன்ற அவலங்கள் நிகழுகின்றன.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button