வீட்டில் எண்ணெய் விளக்கு ஏற்றினால் தேவையான ஆக்சிஜன் கிடைக்குமா ?

பரவிய செய்தி
ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள இந்த இக்கட்டானா நிலையில் நாம் நம் வீட்டில் இயற்கையாக ஆக்சிஜன்(பிரான வாயு) அதிகரிக்க சுத்தமான விளக்கு எண்ணெய் ஊற்றி மாலை வேளையில் ஏற்றி வந்தால் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கான சிகிச்சைக்கு பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
நாடே ஆக்சிஜன் தேவையை சரிசெய்ய முயற்சிக்கையில், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மரம் நடுங்கள் போன்ற பொருத்தமற்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள இன்றைய சூழ்நிலையில் வீட்டில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓர் தகவல் பகிரப்பட்டு வருகிறது. படிக்கும்போதே நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட கதை போன்றே தோன்றினாலும், பலரும் இதை உண்மை என நினைக்கக்கூடும்.
மேலும் படிக்க : பசுவிற்கு விஷம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா ?
இதற்கு முன்பாக, 10 கிராம் நெய்யை நெருப்பில் ஊற்றினால் 1 டன் அளவிற்கு ஆக்சிஜன் உருவாகும். இதற்காக தான் யாகத்தில் பசு நெய் ஊற்றப்படுகிறது என்ற இயற்பியல் விதிக்கு எதிரான வதந்தியை பரப்பினர். அது சாத்தியமில்லாதது என பசு குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் குறித்த கட்டுரையில் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.
இதுகுறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” வளிமண்டலத்தில் 21% ஆக்சிஜன் உள்ளது. அதை விளக்குகளை எரிப்பதன் மூலம் அதிகரிக்க முடியாது. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் 21%க்கும் அதிகமாக கொடுக்கப்படுகிறது. அதை விளக்கு மூலம் செய்ய முடியாது. ஆக்சிஜனைப் பயன்டுத்தி விளக்குகள் எரியும். ஆனால் அது வளிமண்டலத்தில் O2-ஐ(ஆக்சிஜன்) அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல ” எனத் தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், சுத்தமான விளக்கு எண்ணெய் ஊற்றி மாலையில் விளக்கு ஏற்றி வந்தால் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என பரப்பப்படும் தகவல் தவறானது. இது நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட தகவலாக இருக்கும் எனத் தோன்றுகிறது.