பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதானியிடம் ஒப்படைக்கப் போவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும். – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.Facebook Link
மதிப்பீடு
விளக்கம்
96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றாக, கடந்த மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை இந்திய காங்கிரஸ் உட்பட 20 எதிர்கட்சிகளும் புறக்கணித்தனர்.
இந்நிலையில், பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி கூறியதாக ஜெயாபிளஸ் நியூஸ் கார்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
எல்லாம் ‘அவன்’ செயல்🙄🙄 pic.twitter.com/FVnYYiizEg
— Dr M K SHARMILA (@DrSharmila15) May 29, 2023
#பாராளுமன்றம்)த்தையுமா #அதானி கைல?
அப்ப #இந்தியாவையும் இப்படி ஒரு நாள் வித்துருவானுங்களா?#பாஜக_பரிதாபங்கள் pic.twitter.com/Jtvaaf2Dd7— இளஞ்செந்தில் (@VeElanS) May 28, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி ஏதாவது தகவல் தெரிவித்திருக்கிறாரா என்று தேடியதில், அதானி குழுமம் குறித்து அவர் இறுதியாக கடந்த பிப்ரவரி 03 அன்று பேசியிருப்பது தெரிந்தது.
AIR India வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் குறித்து ஜேபிசி விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து, அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்த விவகாரங்களில் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர சமீபத்தில் அவர் அதானி குழுமம் குறித்து பேசியதாக வேறு எந்த ஊடகமும் செய்திகள் வெளியிடவில்லை என்பதையும் அறிய முடிந்தது.
மேலும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடியதில், இதுகுறித்து அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதையும் அறிய முடிந்தது. இதன் மூலம் “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும்” என்று பிரகலாத் ஜோஷி கூறியதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஜெயாபிளஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தேடியதில் இது தொடர்பாக அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் JayaPlus செய்தியின் நியூஸ் கார்டில், JayaPlus-ன் லோகோ கீழேயும், சமீபத்தில் வெளியான நியூஸ் கார்டுகளில் லோகோ மேலேயும் அமைந்திருப்பதை காண முடிகிறது. இதன் மூலம் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் படிக்க: கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த பூத்தில் 10 ஓட்டு மட்டும் விழுந்ததாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடை நஷ்டத்தால் மூடியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
இதற்கு முன்பும் போலியாக பரப்பப்பட்ட பல நியூஸ் கார்டுகள் குறித்து, ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனப் போலி நியூஸ் கார்டை பரப்பும் பாஜகவினர்
முடிவு:
நம் தேடலில், பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஜெயாபிளஸ்-ன் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.