This article is from May 21, 2021

திட்டமிட்டு மீண்டும் பரப்பப்படும் புதியதலைமுறை நிருபரின் பழைய வீடியோ| என்ன நடந்தது ?

பரவிய செய்தி

சாவின் விளிம்பில் இருக்கின்றோம் – முடிந்தால் உண்மையை ஒளிபரப்புங்கள் , இல்லையென்றால் ஒளிபரப்பாதீர்கள் – எங்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம் . புதிய தலைமுறை செய்தியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

புதிய தலைமுறை செய்தியின் நிருபர் ஒருவரை சூழ்ந்த மக்கள், ” சாவின் விளிம்பில் இருக்கின்றோம். எங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். முடிந்தால் உண்மையை ஒளிபரப்புங்கள். இல்லையென்றால் ஒளிபரப்பாதீர்கள் ” என பேசும் 20 நொடிகள் கொண்ட வீடியோ கொரோனா சூழலில் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் 20 நொடிகள் கொண்ட வீடியோவில் பெண் ஒருவர் பேசுவதையே நிலைத்தகவலில் வைத்து உள்ளனர். ஆனால், என்ன பிரச்சனை, என்ன நிகழ்ந்தது, எங்கு நிகழ்ந்தது என எந்த விவரமும் அளிக்கப்படவில்லை.

Archive link 

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல இணை செயலாளர் அபிஷேக் ஜகோப் பதிவிட்ட வீடியோவை புதியதலைமுறை செய்தியின் சிறப்பு நிருபர் ரமேஷ் முருகேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” 4 வருடங்களுக்கு முன் நடந்ததை ஏதோ நேற்று நடந்தது போல் வெளியிடுவதன் காரணம் என்ன ? தேவையில்லாமல் பதிவிட்டு மக்களை குழப்ப வேண்டாம் பழைய வீடியோ என்பதற்கு யாரும் முக கவசம் அணிய வில்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா ?” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

இதையடுத்து, அதிமுக நிர்வாகி அந்த ட்வீட் பதிவை நீக்கி இருக்கிறார். வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் புதியதலைமுறை செய்தியின் நிருபர் ஆனந்த என தன் பெயரை கூறி செல்போனில் பேசுவதை கேட்க முடிந்தது.

இது தொடர்பாக புதியதலைமுறையின் நிருபர் ஆனந்தன் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, ” ஒரு 3-4 வருடங்களுக்கு முன்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அலுவலகத்திற்கு நீட் தொடர்பாக பேட்டி எடுக்க நேரில் சென்று இருந்தேன். அங்கு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருந்தனர். நேரலையை தயார் செய்ய 10 நிமிடங்கள் தாமதம் ஆனது. அலுவலகத்தில் தயாராக காத்திருந்த போது, அங்கிருந்தவர்கள் நீட் ஆதரவாளர்கள் எங்களுக்கும் ஆதரவு தெரிவியுங்கள், நீட் தேர்வை எதிர்ப்பவர்களுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் என என்னிடம் பேசினர்.

நாங்கள் அதற்கு தான் வந்துள்ளோம். அனைவரின் கருத்தையும் வெளியிடுகிறோம் என கூறி விட்டு 10 நிமிடத்தில் நேரலை செய்து விட்டோம். அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். கடந்த ஆண்டும் கூட இதே வீடியோவை வேறொரு தகவலுடன் வைரல் செய்து இருந்தனர். மீண்டும் யாரோ இப்படி திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு :

நம் தேடலில், 4 ஆண்டுகளுக்கு முன்பாக நீட் தேர்வு ஆதரவாளர்கள் புதிய தலைமுறை செய்தியின் நிருபரிடம் பேசிய வீடியோ காட்சியை தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் தவறாக பரப்பி வருகிறார்கள்.

வைரல் செய்யப்படும் வீடியோ எடுக்கப்பட்ட நிகழ்வு குறித்து புதியதலைமுறையின் நிருபர் ஆனந்தன் விளக்கம் அளித்து இருக்கிறார். பழைய வீடியோவை அரசியல் சார்ந்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader