ஓம் என்ற வார்த்தையைக் கேரளாவில் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக வதந்தி !

பரவிய செய்தி
ஓம் என்ற வார்த்தை இஸ்லாத்திற்கு எதிரானது என்பதால் தடை செய்ய கேரளா இஸ்லாமியர்கள் வழியுறுத்தல்.
மதிப்பீடு
விளக்கம்
இந்துக்களின் புனித வார்த்தைகளில் ஒன்றாக ‘ஓம்’ என்ற சொல் கருதப்படுகிறது. அந்த வார்த்தை இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி கேரளாவில் தடை விதிக்க இஸ்லாமியர்கள் வலியுறுத்துவதாக ஸ்க்ரீன் ஷார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த ஸ்க்ரீன் ஷார்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தினையும், இந்தியா ஹிந்து தேசமா அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
உண்மை என்ன ?
கேரளாவில் ‘ஓம்’ என்ற வார்த்தையைத் தடை செய்யக்கோரி இஸ்லாமியர்கள் கூறியது தொடர்பாக ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடினோம்.
#Breaking | ‘Islamists’ oppose ‘Om’ in Kerala.
2 teachers have been punished for writing ‘Om’.
TIMES NOW’s Vivek Narayan with details. Listen in. | #OMNotAllowed pic.twitter.com/xXnx3fqMBy
— TIMES NOW (@TimesNow) February 17, 2020
கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் கணிதப் பாடம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தில் ‘ஓம்’ என்ற வாசகத்தை ஆசிரியர் இருவர் அச்சிட்டுக் கொடுத்தது தொடர்பாக 2020, பிப்ரவரி 17ம் தேதி ‘டைம்ஸ் நவ்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கணிதம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தில் மத சின்னங்கள் அச்சிட்டுக் கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பள்ளியில் கணித வகுப்பின் ஒரு பகுதியாக 5 முதல் 7ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செய்முறை கற்றல் மூலம் கற்பிக்கப்படுகிறது. 2020, பிப்ரவரி 8ம் தேதி வகுப்பில் அளிக்கப்படத் துண்டுப் பிரசுரத்தில் ‘ஓம்’ என்னும் சின்னம், சரஸ்வதி மற்றும் ஐயப்பன் படங்கள் அச்சிட்டு இரண்டு ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். இதற்குப் பெற்றோர்கள் , பிஎப்ஐ அமைப்பு மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதை அடுத்து ஆசிரியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக ‘நியூஸ் மினிட்’ இணையதளமும் 2020, பிப்ரவரி 12ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், கடவுளின் படங்களை அச்சடித்துக் கொடுத்த ஆசிரியர்களில் ஒருவரான ராஜலட்சுமி என்பவர் கணித பிரார்த்தனை என்னும் 12 பக்க சிறிய புத்தகத்தை மாணவர்களுக்கு அளித்துள்ளார். இந்த பிரார்த்தனை கணிதம் கற்க உதவும் என்பதால் தினமும் செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அந்நிகழ்வு குறித்து உதவிக் கல்வி அதிகாரி (AEO) ராஜ் குமார் கூறியதும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். ‘இது அரசுப் பள்ளி. ஆசிரியர்கள் மத சின்னங்களை மாணவர்களுக்குப் பிரசுரித்தது விதிகளுக்கு எதிரானது. நாம் பள்ளியைப் பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கு அனைவரது ஆதரவும் வேண்டும். இரண்டு ஆசிரியர்களின் அலட்சியமே இந்த நிகழ்வுக்குக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.
இதை தவிர்த்து ஓம் என்ற வார்த்தையை கேரளாவில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அரசு பள்ளியில் மதம் சார்ந்த பிரசுரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தடை செய்ய சொன்னதாக வதந்தி பரப்பி உள்ளனர்.
மேலும் படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ
முன்னதாக இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்திகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கலெக்டர் பிராமணர் என்பதால் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி !
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் ஓம் என்னும் வார்த்தையைத் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாகப் பரவும் தகவல் உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.