This article is from Jul 18, 2020

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அரசு வேலை என கெஜ்ரிவால் திட்டமா ?

பரவிய செய்தி

கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும் .

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் தலைவர் டெல்லியை ஆட்சி செய்யும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டும் அரசு வேலை என்கிற புதிய திட்டத்தைக் கொண்டு வரப் போவதாக ஓர் ஃபார்வர்டு தகவல் சமூக வலைதளங்களில் மற்றும் சில இணையதளங்களில் பரவி வருகிறது.

Website link | archive link

உண்மை என்ன ?  

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது நல்ல திட்டமாகும். இதனால் அரசு வேலை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பலரின் கனவு நனவாகும். ஆனால், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களை நீக்குவது உள்ளிட்டவை சாத்தியமா எனத்.தெரியவில்லை. அதுவும் கொரோனா நெருக்கடியில் எப்படி செயல்படுத்துவார்கள். இப்படியொரு திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தப்போவதாகவும், அதன் பயன்கள் மற்றும் விதிமுறைகள் என நீண்ட பதிவு ஒன்று பரவுகிறது. ஆனால், அது தொடர்பாக தேடியப் பார்க்கையில் அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது முன்னணி செய்தி ஊடகங்களிலோ எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

2020 பிப்ரவரி மாதம் தி பிரிண்ட் இணையதளத்தில் வெளியான செய்தியில், ” 2015-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் ஆம் ஆத்மி கட்சி கூறி இருந்தது. ஆனால், 2020 தேர்தல் வாக்குறுதியில் வேலைவாய்ப்பு குறித்து பேசவில்லை ” என இடம்பெற்று இருக்கிறது.

அதுமட்டுமின்றி, இப்படி வைரல் செய்யப்படும் நீண்ட பதிவின் இறுதி வாக்கியத்தில் ” இவர் இந்த திட்டத்தைத் தொடங்க இருக்கிறார் என்பது அவரது கட்சியினர் மூலம் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அனைவரும் அவரை ஊடகம் மற்றும் சமூக வலைதளம் மூலம் பாராட்டி வருகின்றனர் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இது கட்சியினர் வாயிலாக வந்ததாக தெரிவித்து உள்ளனர். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் இப்படியொரு யோசனையில் இருக்கிறார் என எந்தவொரு ஊடகமும் வெளியிடவில்லை.

கொரோனா பொதுமுடக்கத்தை அடுத்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க நகரில் வேலைத் தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கு டெல்லி அரசு புதிய தளத்தை உருவாக்க உள்ளதாக கடந்த ஜூன் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. மற்றபடி, அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த போவதாக எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு யூடர்ன் தரப்பில் இருந்து மெயில் அனுப்பி உள்ளோம். அவர்களிடம் இருந்து பதில் வரும் பட்சத்தில் அதையும் இணைக்க தயாராக உள்ளோம்.

கூடுதல் தகவல் 

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் வெளியான செய்தியில், ” 2018-ல் சிக்கிம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ” குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ” எனும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் அறிவித்தார். அதுபோலவே, காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ” என்கிற செய்தி கிடைத்தது.

எனினும், கடந்த ஆண்டில் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வென்று புதிதாக ஆட்சியில் அமர்ந்த முதல்வர் கோலேவின் அரசு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணையில் சுமார் 40% பேரின் ஆணையை ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது. அதற்கு காரணம், வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதில் தவறுகள் இருப்பதாகவும், ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் எனக் அக்கட்சி சார்பில் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும் எனும் திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கொண்டு வருவதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader