This article is from May 20, 2018

தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள்.

பரவிய செய்தி

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான ஒரு எண்ணெய் கிணறுக்கு கூட முறையான உரிமம் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் 71 எண்ணெய் கிணறுகள் உட்பட எந்தவொரு கிணற்றுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் காவிரி டெல்டாவில் ஓ.என்.ஜி.சி செயல்பாடு குறித்த ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

விளக்கம்

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று பல்வேறு தொடர் போராட்டங்களில் தமிழக மக்கள் ஈடுபட்டனர். எனினும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஓ.என்.ஜி.சி தனது பணியினை தொடர்ந்து செயல்படுத்தியே வந்தது.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து “ காவிரி டெல்டா வாட்ச் ” என்ற தன்னார்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், தகவல் அறியும் உரிமம் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் மற்றும் இணைய தகவல்களின்படி காவிரி பகுதியில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் உரிய உரிமம் இன்றி இயங்கி வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தன்னார்வு அமைப்பின் ஆய்வறிக்கை, காவிரி படுகையில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சியின் எந்தவொரு கிணற்றுக்கும் முறையான சுற்றுச்சூழல் உரிமத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம்(த.நா.மா.கவா) பெறவில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பகுதியில் இருப்பதாக அறிவித்த 700 எண்ணெய் கிணறுகளில் 219 கிணறுகள் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. எனினும், இந்த 219 கிணறுகளில் 183 எண்ணெய் கிணறுகளில் உற்பத்தி நடைபெற்று வருவதாக ஓ.என்.ஜி.சி கூறியுள்ளது.

ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆவணங்களின்படி ஓ.என்.ஜி.சியின் 71 கிணறுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. மேலும், உற்பத்தி நடைபெறுவதாக கூறப்படும் 71 கிணறுகள் உட்பட ஓ.என்.ஜி.சியின் எந்தவொரு கிணறுகளுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம்,  செயல்படுவதற்கான ஒப்புதல் (consent to operate) பெறவில்லை என்பது ஆய்வறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

ஜூன் 30, 2017-ல் கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறுகளின் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தையும்  ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிர்வாக இயக்குனர் குல்பிர் சிங் கூறுகையில், “ இவை அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். எங்களின் அனைத்து எண்ணெய் கிணறுகளும் CTO முறைப்படி அமைந்துள்ளது. முறையான ஒப்புதல்கள் இன்றி எவ்வாறு இயக்க முடியும்? இது தவிர சம்பந்தப்பட்ட ஆணையம் எங்களின் CTO விண்ணப்பத்திற்கு மூன்று மாதங்களில் பதிலளிக்கவில்லை என்றால் உரிமம் வழங்கியதாக கருதப்படும் என்று விதிமுறைகள் தெரிவிக்கின்றது. நாங்கள் சட்டரீதியான ஒப்புதல் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், காவிரி பகுதியில் எண்ணெய் கிணறுகள் என்ற பெயரில் விவசாயத்தை அழிக்க முயற்சிப்பதாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வலுக்கின்றன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader