ஆன்லைன் சூதாட்ட தண்டனையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தவறானச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்

பரவிய செய்தி

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. 

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தினை இயற்றியது. அச்சட்டத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதலும் அளித்தார்.ஆளுநர் ஒப்புதல் அளித்ததினை தொடர்ந்து அச்சட்டத்திலுள்ள அம்சங்கள் குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன.

அத்தகைய செய்தியில் நியூஸ் 7, தந்தி, சன் செய்திகள் உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனக் குறிப்பிட்டு உள்ளது. 

News link 

உண்மை என்ன ?

ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அன்றைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது.

அந்த சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த சட்டத்தினை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களால் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறுகட்ட விசாரணைக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடியாது என அச்சட்டத்தினை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது. அதன் பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து அறிவுரை வழங்கத் தமிழ்நாடு அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

அக்குழு தனது அறிக்கையினை கடந்த ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் குறித்து அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அதற்குக் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது. 

இந்த அவசரச் சட்டத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

அரசாணையில் இருப்பது என்ன ?

ஆன்லைன் சூதாட்டங்கள் தடை விதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு கடந்த 3ம் தேதி அரசாணையினை வெளியிட்டுள்ளது. அவ்வாணையில்  தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம், 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றினை அமைக்கும். அவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்கள் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தலைவர், நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அவ்வமைப்பில் தலைமைச் செயலருக்கு நிகரான அதிகாரம் கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார். மேலும், ஐஜி-க்கு நிகரான அதிகாரம் கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரி, தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டு நிபுணர் ஆகியோர் இவ்வமைப்பின் உறுப்பினராக அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவர்.

தண்டனை : 

இந்த சட்டத்தின்படி ஆன்லைன் சூதாட்டத்தினை விளையாடுபவருக்கு ரூ.5000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்பவருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வாழங்கப்படும்.

இத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது 3 வருடம் சிறை அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தால் வழங்கும் இத்தகைய தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அரசாணையில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் மீது ஒரு தனிநபர் நேரடியாக வழக்கு தொடர முடியாது. அரசால் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாகவே அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடியும். 

ஒரு தனிநபர் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தால், அந்நபரின் தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு மிரட்டப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய காரணத்திற்காகவே ஆணையத்தின் மூலமாகப் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புகார் அளிப்பவர் யார் என்பது பற்றி விவரம் ரகசியம் காக்கப்படும்.

இதுகுறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்களிடம் பேசுகையில், ” நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தவறு, இக்குழு அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இக்குழு அங்கீகரிக்கும் நபர் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழக்கு தொடுக்க முடியும் நேரடியாக வழக்குப் பதிவு செய்ய இயலாது ” என விளக்கம் அளித்தார்.

இந்த விதியினை தான் “ஆணையம் அளிக்கும் தண்டனை மீது நீதிமன்றம் தலையிட முடியாது” என ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

முடிவு :

நம் தேடலில், ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அறிய முடிகிறது. 

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தின் மீது தனிநபர் நேரடியாக வழக்கு தொடர முடியாது. ஆணையத்தின் ஒப்புதல் பேரில், ஆணையத்தின் மூலமாகவே வழக்குத் தொடுக்க முடியும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader