ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எனப் பரவும் புகைப்படம் !

பரவிய செய்தி
ஆப்ரேஷன் காவேரி.. இந்தியன் எயா்போா்ஷ் நமது அபிமானம்.
மதிப்பீடு
விளக்கம்
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அப்தல் ஃபதா அல் புர்ஹான் என்னும் ராணுவத் தளபதி தரப்பினரும், துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) பிரிவினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மோதலில் பலரும் உயிரிழந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஆபரேஷன் காவேரி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Bhairavinachiya/status/1652152082777145346
இந்நிலையில், சூடானில் இருந்து விமானத்தின் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் எனப் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சூடானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். கடந்த 27ம் தேதி இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக விமானங்களையும், கப்பல்களையும் ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. போர்ட் சூடானிலிருந்து சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர்.
இந்த மீட்புப் பணி குறித்து ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட செய்தியில், 360 பேர் கொண்ட முதல் குழு, சவூதி அரேபிய விமானம் மூலம் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தனர் என ஏப்ரல் 27ம் தேதி வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பரவக் கூடிய புகைப்படம் எந்த செய்திகளிலும் இடம்பெறவில்லை.
மேற்கொண்டு இது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். பல்வேறு கட்டங்களாக சூடானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து, புகைப்படத்துடன் கூடிய பதிவுகளைக் காண முடிந்தது. ஆனால், அதிலும் பரவக் கூடிய புகைப்படம் இல்லை.
How's the josh? #OperationKaveri
135 more Indian evacuees reached Jeddah by IAF C-130J.
With this 12th batch, around 2100 Indians arrived in Jeddah in total.
Our efforts will continue. pic.twitter.com/zviHg0HJyz
— V. Muraleedharan (@MOS_MEA) April 28, 2023
அதேபோல் ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த 12வது பேட்ச் மூலம் மொத்தம் 2100 இந்தியர்கள் ஜெட்டா வந்தடைந்தனர். நமது முயற்சிகள் தொடரும்” எனப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள டகோலோபன் (Tacloban) நகரில் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களை மணிலாவுக்கு சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் மீட்டுள்ளனர். இது குறித்து 2013, டிசம்பர் 17ம் தேதி ‘பசிபிக் ஏர் போர்சஸ்’ இணையத்தில் செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : ஆப்கானிஸ்தானில் இருந்து 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்தார்களா ?
தற்போது பரவக் கூடிய இதே புகைப்படத்தை 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் இந்திய விமானப்படை மீட்டதாகப் பரப்பப்பட்டது. அப்போதே அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் என இணையத்தில் பரவும் புகைப்படம் உண்மையில்ல. அது 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மீட்கப்பட்டவர்களின் புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.
சூடானில் இருந்தும் பல்வேறு கட்டங்களாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தம் :
சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் என பிலிப்பைன்ஸ் நாட்டின் புகைப்படம் பகிரப்படுவதாக பதிவிட்டு இருந்தோம். ஆனால், இந்தியன் ஏர் ஃபோர்ஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் ஏப்ரல் 28ம் தேதி பதிவிடப்பட்டு இருக்கிறது.
ஆகையால், கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இக்கட்டுரை தொடர்பான பதிவுகள் அனைத்தும் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.