மோடியின் முன் ஓபிஎஸ் குனிந்து வணங்குவதாக பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !

பரவிய செய்தி
எப்படி கம்பீரமாக இருந்த தமிழ்நாடு.. இப்படி கூணி குனிந்து விட்டது அடிமைகளால்…
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடி இருக்கையில் அமர்ந்து இருக்க அவரின் முன் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் வைக்கும் புகைப்படமும், காமராஜரின் புகைப்படமும் ஒப்பிடப்பட்டு உள்ளது. இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் ஒருவரால் கேட்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக ஆட்சியில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்ந்ததை பார்த்து இருப்போம். அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை தக்க வைக்க பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக இப்படியொரு ஃபோட்டோஷாப் புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.
மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடந்த 2016-ம் ஆண்டு PIB இந்தியா ட்விட்டர் பக்கத்தில், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் பிரதமர் மோடி அமர்ந்து இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
CM Tamil Nadu, Shri O. Panneerselvam calls on PM @narendramodi pic.twitter.com/soHmR5hDbj
— PIB India (@PIB_India) December 19, 2016
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் குனிந்து வணக்கம் வைப்பது வழக்கத்தை வைத்து இருந்தனர். அப்படி ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை வணங்கும் புகைப்படத்தில் இருந்து ஓபிஎஸ் பகுதியை எடுத்து மோடி புகைப்படத்துடன் ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !
சமூக வலைதளங்களில் இப்படி பல்வேறு ஃபோட்டோஷாப் புகைப்படங்கள் வைரல் செய்யப்படுகின்றன. இதேபோல், ஓபிஎஸ் முன்பாக எடப்பாடி பழனிச்சாமி குனிந்து வணக்கம் வைத்ததாக எடிட் செய்த புகைப்படம் பரப்பப்பட்டது.