சென்னையிலும் காற்று விற்பனை வந்து விட்டது..!

பரவிய செய்தி

சென்னையில் உள்ள விளையாட்டு திடலின் அருகில் விற்பனைக்கு வந்துள்ள ஆக்சிஜன் கேன்கள். இனி தமிழ்நாட்டிலும் அனைவரும் காற்றை காசுக் கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலை உருவாகும்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் OXY99 ஆக்சிஜன் கேன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆன்லைன் விற்பனையிலும் களம் இறங்கியுள்ளது.

விளக்கம்

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து மனிதர்கள் சுவாசிக்கக் கூட முடியாதநிலை உருவாகி விட்டது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் நிறைந்த பகுதி எது என்றால் அனைவரும் உடனடியாக டெல்லி என்றுக் கூறுவர். டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசின் நிலை நினைத்து பார்க்க இயலாத அளவிற்கு அதிகரிக்கிறது.

Advertisement

இதைப் பயன்படுத்தி இந்தியாவில் சுத்தமான காற்றினை கேன்களில் அடைத்து விற்கும் முயற்சியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இறங்கி உள்ளன. அதன் தொடக்கமாக ” சென்னையில் உள்ள விளையாட்டு திடலின் அருகில் ஆக்சிஜன் கேன்கள் ” விற்பனைக்கு வைத்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி நிறுவனமான பாய்ச்சி OXY99 ஆக்சிஜன் கேன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் பணிகளை செய்து வருகிறது. OXY99 ஆக்சிஜன் கேன்களே சென்னை திடலில் பார்க்கப்பட்டவை. இந்த OXY99 ஆக்சிஜன் கேன்கள் “Flipkart, Amazon, Snapdeal “ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திலும் விற்கப்படுகிறது.

இந்த ஆக்ஸிஜன் கேன் 3 வகைகளில் கிடைக்கிறது. முதல் வகை ஆக்ஸிஜன் கேன் பொது உபயோகத்திற்கு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மருத்துவ உபயோகத்திற்கு அல்ல. இரண்டாம் வகை ஸ்போர்ட்ஸ் ஆக்ஸிஜன் கேன் . விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவது. மூன்றாம் வகை மருத்துவத்திற்காக பயன்படுத்துவது. ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, முதலுதவி, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம் என்கிறார்கள்.

Advertisement

” ஒரு OXY99 ஆக்சிஜன் கேன் ரூ.650க்கு விற்கப்படுகிறது. இதனுடன் ஆன்லைன் சலுகைகள் என விலையை குறைத்தும் பல நிறுவனங்கள் விற்பனையில் போட்டி போடுகின்றனர். OXY99 ஆக்சிஜன் கேன்கள் எப்படி பயன்படுத்துவது என்று தனியாக வீடியோ பதிவை அவர்களின் இணையப் பக்கத்திலும், youtube-லும் வெளியிட்டு உள்ளனர் “.

நாட்டில் காற்று மாசு அதிகரித்து நுரையீரல் புற்றுநோய், மூச்சுத்திணறல் சம்பந்தபட்ட நோய்கள், இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. ஆக, சுகாதாரம் சார்ந்த உபயோகத்திற்கு என்று இந்த காற்று விற்பனை நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் நுழைவதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது.

இதற்கு முன்பாக கனடா நிறுவனமான “ விடாலிட்டி ஏர் ” கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றினை இந்தியாவில் விற்பனை செய்ய இந்திய நிறுவனம் ஒன்றுடன் கைக் கோர்த்து களம் இறங்கியது. முதற்கட்டமாக 100 கேன்களை மட்டும் விற்பனை செய்யவும், ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தவும் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாலிட்டி ஏர் மற்றும் OXY 99 ஆகிய நிறுவனங்கள் தங்களின் காற்று விற்பனையை இந்தியாவில் தொடங்கி உள்ளன. மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் காற்று விற்பனை அதிகரித்து வருவதால், சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் விற்பனையைத் தொடங்கி உள்ளன வெளிநாட்டு நிறுவனங்கள்.

மனிதனின் பொறுப்பற்ற செயலால் இயற்கை அளித்து வந்த சுத்தமான காற்று, சுத்தமான நீர் என அனைத்தும் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காற்று விற்பனை வந்து இருப்பது அதிர்ச்சி அளித்தாலும், நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை இப்பொழுதே நம் கண்முன் வந்து செல்கிறது.

நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுப்படுத்தும் செயலில் இருந்து மாறி இயற்கையைப் பேணிக் காப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button