பாகிஸ்தான் மக்கள் காஷ்மீருக்கு பதிலாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் கேட்டார்களா ?

பரவிய செய்தி
பாகிஸ்தானின் இன்றைய நிலை காஷ்மீர் வேண்டாம், hydroxychloroquine கொடுங்கள் என்று இந்தியாவை நோக்கி.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை அளிக்குமாறு பேனர் உடன் நிற்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் மக்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை கேட்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் உண்மையானவை அல்ல. அது போட்டோஷாப் செய்யப்பட்டவை என்பதை கூர்மையாக கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் வைரல் செய்யப்பட்டு வரும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனது தேடுகையில், 2018-ல் ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்ட புகைப்படத்தில் ” We don’t want kashmir give us virat kohli ” என இடம்பெற்ற பேனர் இருக்கிறது.
2018-ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் நாட்டின் மக்கள் கேட்டதாக வைரல் செய்யப்பட்ட பேனரும் எடிட் செய்யப்பட்டவையே. உண்மையில், காஷ்மீர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ” We Want Azaadi ” என்ற வாசகத்தை கொண்ட பேனர் உடன் நிற்கும் புகைப்படமே தொடர்ந்து தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
2016-ல் வெளியான இந்தியா டுடே செய்தியில், ஹிஸ்புல் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை காலத்தில் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திய உண்மையான பேனர்களில் ” எங்களுக்கு ஆசாதி வேண்டும் ” என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
நம்முடைய தேடலில் இருந்து, 2016-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆசாதி வேண்டும் என இளைஞர்கள் ஏந்தி இருக்கும் பேனரில் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கேட்டதாக எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.