This article is from Jan 04, 2020

பாகிஸ்தானில் இந்து குழந்தையை மதமாற்றம் செய்து கட்டாய திருமணமா ?

பரவிய செய்தி

பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியைச் சேர்ந்த 9 வயது குழந்தை வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் குழந்தையின் தந்தை வயது உடைய நபருடன் திருமணம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலை நரகத்தில் இருப்பதற்கு இணையானது. இது குறித்து ஊடகங்களில் வெளியாகவில்லை. இதுவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தான் நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த குழந்தையை கட்டாய மதமாற்றம் செய்த பிறகு குழந்தையின் தந்தை வயது உள்ள ஒருவருடன் கட்டாய திருமணம் செய்துள்ளதாக பெண் குழந்தை மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

இப்படி வைரலாகும் புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை மட்டுமின்றி பாகிஸ்தானில் நடைபெறும் குழந்தை திருமணம், இந்து பெண்கள் மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்கள் குறித்து நாம் அவசியம் பார்க்க வேண்டி இருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு தந்தை வயது உடைய ஒருவருக்கு திருமணம் நடந்தது உண்மையே. 2019 மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஷிகபூர் கிராமத்தில் மொஹமத் சூமர் என்ற நபருக்கும் 10 வயது உடைய பெண் குழந்தைக்கும் நிக்கா (திருமணம்) முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். குழந்தைக்கு திருமணம் நடந்து இருந்தாலும், கட்டாய குழந்தை திருமணத்திற்காக மொஹமத் சூமரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர் என Pakistan today செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Youtube link 

மேலும், மொஹமத் சூமர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் போது, திருமணத்திற்காக 2,50,000 பாகிஸ்தான் ரூபாயை குழந்தையின் பாட்டியிடம் கொடுத்ததாக கூறி இருந்தார். சுக்கூர் பகுதியின் ஏ.ஐ.ஜி.பி ஜமீல் அஹ்மத் தன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”  கஷ்மோர் போலீசால் உரிய நேரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் குழந்தை வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் 24 மணி நேரத்தில் நடந்தது. நேற்று 10 வயது குழந்தையின் வாழ்க்கை போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter archived ink 

மற்றொரு ட்வீடில், ” மாலுகா குத்தி (Maluka guddi) என்ற குழந்தை ஷிகபூர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளார். குழந்தையை விட 4/5 மடங்கு அதிக வயது உடைய  மொஹமத் சூமர் என்ற நபருக்கு 2,50,000 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படும் கொடூரமான குடும்பத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை ” என குழந்தை குறித்து கேள்வி எழுப்பி இருந்த நபருக்கு ஏ.ஐ.ஜி.பி பதில் அளித்து இருந்தார்.

10 வயது குழந்தைக்கு திருமணம் நடைபெற்ற இடத்திற்கு போலீஸ் வந்த பொழுது குழந்தையின் பெற்றோர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி மட்டுமே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். ஆகையால், குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபர் மற்றும் குழந்தையின் பெற்றோர் ஆகிய இரு தரப்பின் மீதும் போலீசார் குற்றம் சுமத்துவதால் குழந்தை கடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை.

மேலும், திருமணம் செய்து வைக்கப்பட்ட குழந்தையின் பெயரை மாலுகா குத்தி (Maluka guddi) என பாகிஸ்தான் போலீஸ் தரப்பிலும், ஊடகங்களிலும் குறிப்பிட்டு இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக இந்து குழந்தையை இஸ்லாமிற்கு மதம் மாற்றம் செய்ததாக உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

எனினும், குழந்தை திருமணம் எனும் பார்வையில் கடுமையாக கண்டிக்கத்தக்கவையே. பாகிஸ்தானில் குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன. அந்நேரத்தில் ஊடகங்களில் விவாத தலைப்பாகவும் உருவெடுக்கிறது. பாகிஸ்தானில் ஏப்ரல் 19-ம் தேதி பெண்ணின் திருமண வயது 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், குழந்தை திருமணங்கள் அரங்கேறியே வருகிறது.

இந்து பெண் கடத்தல் : 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டாயம் மாற்றப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுவதை மறுக்க முடியாது.

கடந்த 2019 செப்டம்பர் மாதம் சிந்து மாகாணத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரேணுகா குமாரி என்ற பெண்ணை கடத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இது இரண்டாவது சம்பவம் என கூறப்படுகிறது. எனினும், அப்பெண் கடத்தப்பட்டாரா அல்லது அவராக சென்றாரா என போலீஸ் விசாரணை செய்வதாக கூறி இருந்தனர். இந்து பெண்கள் மட்டுமில்லாமல், சீக்கிய மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களையும் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

ஏப்ரல் 2019-ல் பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 2018-ல் தெற்கு சிந்து பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் 1000-க்கும் அதிகமாக நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இதன் தாக்கத்தால், 2019 ஜூலை மாதம் சிந்து சட்டசபையில், இந்து பெண்களை கடத்துவது மற்றும் கட்டாய மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 9 வயது இந்து குழந்தை மதம் மாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்து உள்ளதாக வெளியான புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, இந்து மதத்தில் இருந்து மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட்டது தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் இல்லை. அக்குழந்தையின் பெயரை மாலுகா என போலீஸ் அதிகாரி குறிப்பிட்டு இருக்கிறார். செய்திகளிலும் அவ்வாறே வெளியாகி இருக்கிறது. அக்குழந்தையை திருமணம் செய்த நபர் மற்றும் குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.

எனினும், சிந்து மாகாணத்தில் இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகளிலும், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட விவர அறிக்கையும் எடுத்துக் கூறுகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader