பாகிஸ்தானின் கராச்சியில் உள்நாட்டு போர் என பரவும் பழைய புகைப்படங்கள் !

பரவிய செய்தி
பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது. ராணுவம் போலீசார் இடையே கடும் மோதல்.
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவாகி உள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பாகிஸ்தானில் உள்ள பதற்றமான சூழ்நிலையுடன் தொடர்புப்படுத்தி இந்திய அளவில் பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
புகைப்படம் 1 :
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி www.independent.co.uk இணையதளத்தில் பாகிஸ்தானின் பேஷ்வார் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 37 உயிரிழந்து உள்ளதாகவும், 75 பேர் காயமடைந்து உள்ளதாக வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 2 :
ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி நகரில் செல்லும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015 டிசம்பர் 8-ம் தேதி tribune.com.pk செய்தி இணையதளத்தில் ” Govt won’t surrender Karachi operation gains ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 3 :
அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2009-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி edition.cnn.com இணையதளத்தில் ” Death toll rises in Karachi suicide attack ” எனும் தலைப்பில் வெளியான செய்தியுடன் மூன்றாவது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. கராச்சி நகரில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்ந்தது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது.
புகைப்படம் 4 :
இறுதியாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2006-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி Chinadaily.com எனும் இணையதளத்தில் கராச்சியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது என பரப்பப்படும் புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக கராச்சி நகரில் மற்றும் பிற பகுதியில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.