பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு, செங்கற்களை உணவுக்காக விற்பதாகப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்கிறார்கள். சமீபத்தில் இடிக்கப்படும் 3வது மசூதி இதுவாகும். அல்லாஹ் நமக்கு உணவளிக்க முடியாவிட்டால் மஸ்ஜித்களின் தேவை என்ன?
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களினால் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகியுள்ளனர்.
In Pakistan they are demolishing masjids and selling it for iron and bricks for their food. This is the 3rd masjid demolished in the recent past. They say if Allah can't give us food what is the need of masjids???? pic.twitter.com/u6KJlw2T1h
— 🚩🚩🚩🇮🇳Senthil.C🚩🚩🚩 (@senthilkumarpcm) February 12, 2023
இந்நிலையில், அல்லா தங்களுக்கு உணவு அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் மசூதி தேவையா? என மசூதியை இடித்து அதிலுள்ள இரும்பு மற்றும் செங்கற்களை உணவிற்காக விற்கின்றனர் என வீடியோ ஒன்று சமூக வலைததலங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் பரவக் கூடிய வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘The Express Tribune’ என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளியான செய்தியில் இந்த சம்பவம் பாகிஸ்தான் கராச்சியில் நடந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து ‘The Indian Express’ இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ப்ரீடி (Preedy) என்ற காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் பிப்ரவரி 3ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இந்த இடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் அச்செய்திகளில், “சிறுபான்மையினராக உள்ள அஹ்மதியா பிரிவினரின் வழிபாட்டுத் தளத்தைச் சிலர் இடித்துள்ளனர். இந்த இடிப்பு நிகழ்வின் போது அங்கிருந்த காவல் துறையினர் அக்குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை.
இதே போன்று வேறொரு சம்பவம் பாகிஸ்தான் மார்டின் சாலையில் அமைந்துள்ள அஹ்மதியா வழிபாட்டுத் தளத்தின் மீதும் கடந்த ஜனவரி 18ம் தேதி நடத்தப்பட்டது. அது தொடர்பாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என Tribune செய்தியாளரிடம் அஹ்மதியா சமூகத்தை சேர்ந்த அமீர் மெஹ்மூத் தெரிவித்துள்ளார்.
‘மிர்சா குலாம் அகமது’ என்பவர் 1889ம் ஆண்டு ‘அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்’ என்னும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவரது இறப்பிற்குப் பிறகு அவ்வியக்கத்திலிருந்து தோன்றிய இரண்டு பிரிவுகளில் ஒன்றுதான் ‘அஹ்மதியா’ பிரிவாகும்.

இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக் கூறுவதால் மற்ற இசுலாமியப் பிரிவினர் இவர்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. இப்பிரிவினர் பாகிஸ்தானில் சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர்.
இதிலிருந்து வறுமையின் காரணமாகப் பாகிஸ்தானில் உள்ள மசூதிகளை இடித்து, அதில் உள்ள செங்கல் மற்றும் இரும்பினை விற்பதாகப் பரவிய வீடியோ உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தானில் தங்களுக்கு உணவளிக்காத கடவுள் எதற்கு என மசூதியை இடித்து அதன் செங்கல் மற்றும் இரும்பை விற்று வருவதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹ்மதியா முஸ்லீம் பிரிவின் வழிபாட்டுத் தளத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இடித்த வீடியோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.