பாகிஸ்தானில் மதம் மாற மறுத்த இந்து தலித் தாய், மகள் தாக்கப்படுவதாகப் பரவும் வாட்ஸ்அப் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தின் இந்த வீடியோவில், இந்து தலித் தாய் மற்றும் மகளின் ஆடைகளை நிர்வாணமாகக் கிழித்து, அதே நிலையில் சந்தையில் பொது இடத்தில் அடித்துத் தள்ளியது.

இந்து தலித் தாயும் மகளும் மிரட்டலுக்கு முன் முஸ்லீமாக மாற்றப்பட்டனர், இது தலித் தாயும் மகளும் ஏற்கவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் ரகசியமாக வழிபட்டனர், பின்னர் ஒரு நாள் பல முஸ்லிம்கள் அவர்களின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவர்களைப் பிடித்துக் கொண்டனர். கடவுளே, அது என்ன? இந்த தாய் மற்றும் மகள் இருவரும் இந்த முஸ்லிம்களின் பெரும் கூட்டத்தின் முன் அப்புறப்படுத்தப்பட்டனர், இது வீடியோவில் காட்டப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத் பகுதியில் மதம் மாற மறுத்த இந்து தலித் தாய் மற்றும் மகளை பொது இடத்தில் வைத்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்குவதாக 1 நிமிட வீடியோ ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் மற்றும் சிறுமி அரை நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இருப்பதால் அந்த வீடியோவை நாங்கள் இங்கு பகிரவில்லை.

உண்மை என்ன ? 

வைரல் வீடியோ குறித்து 2021 டிசம்பர் 7ம் தேதி பாகிஸ்தான் செய்தி நிறுவனமான டவ்ன் வெளியிட்ட செய்தியில், ” பைசலாபாத் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் காலை 10.30 மணியளவில் குப்பை சேகரிக்க மற்ற மூன்று பெண்களுடன் சந்தைக்குச் சென்றுள்ளார் . அங்குள்ள எலெக்ட்ரிக் ஸ்டோரில் உள்ளே சென்று உரிமையாளரிடம் தண்ணீர் கேட்டதாகவும், ஆனால் கடையில் திருடியதாக குற்றம் சாட்டி  நான்கு பெண்களையும் சந்தையில் வைத்து உடைகளை கலைத்து அடித்ததாக பாதிக்கப்பட்டவர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்” என இடம்பெற்று உள்ளது.

Twitter link | Archive link 

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உள்பட 5 பேரை கைது செய்து உள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

Archive link 

ஆனால், மேற்கொண்டு தேடிய போது, அங்கு எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவால் சம்பவமே வேறாக மாறியதாகவும், கடைக்குள் வந்த பெண்கள் அங்கு திருடியதாகவும், அவர்களே உடைகளை கலைத்துக் கொண்டதாகவும் Daily Pakistan, Tribune உள்ளிட்ட செய்தி இணையதளங்களில் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

கடைக்குள் பதிவான சிசிடிவி காட்சியில், கடைக்குள் நுழையும் நான்கு பெண்களில் ஒருவர் உள்ளே செல்கிறார், ஒருவர் கடையில் இருந்த ஒரு பொருளை எடுத்து உடையில் மறைக்கிறார், இதனால் கடையின் உரிமையாளர் அங்கிருந்து ஓடி கதவை மூடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த பெண்கள் வெளியே வந்த பிறகு உரிமையாளர் அவர்களை பிடித்து வைக்க மாற்றி மாற்றி அடித்துக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அங்கிருந்து இரு பெண்கள் ஓடவே ,மற்ற இரு பெண்களை பிடித்து வைத்துள்ளனர்

Twitter link | Archive link 

மற்றொரு சிசிடிவி காட்சியில், சாலையை கடந்து சம்பவ இடத்திற்கு திரும்பி வரும் ஒரு பெண் தன் உடைகளை கலைத்த பிறகு உடனிருந்த சிறுமியின் உடைகளையும் கழட்டிவிட்டு கூட்டத்திற்குள் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்ற பெண்ணும், சிறுமியுமே வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்று உள்ளனர். இச்சம்பவம் குறித்த செய்திகள் மற்றும் பதிவுகளில் எங்கும் மதம் சார்ந்த விசயம் என இடம்பெற்றவிலை.

வைரல் செய்யப்படும் வீடியோவிலும் 33வது நொடியில், கத்தி அழுதுக் கொண்டு இருக்கும் பெண்ணே அருகில் வரும் சிறுமியின் உடலில் இருந்த துணியை கழட்டி கீழே போடுவது போன்ற காட்சியை காண முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத் பகுதியில் மதம் மாற மறுத்த இந்து தலித் தாய் மற்றும் மகளை பொது இடத்தில் வைத்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்குவதாக பரப்பப்படும் வீடியோ வாட்ஸ்அப் வதந்தியே.

பைசலாபாத் பகுதியில் உள்ள கடையில் நான்கு பெண்கள் புகுந்து திருடியதாக வைரலான வீடியோவில் இடம்பெற்ற காட்சியை எடுத்து மதத்துடன் தொடர்புப்படுத்தி இந்தியாவில் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader