பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மக்கள் இந்தியா உடன் இணைய சபதம் எடுப்பதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய சபதம் எடுத்ததாகவும், இந்துஸ்தான் ஜிந்த்பாத் என முழக்கமிடுவதாகக் கூறி 1.39 நிமிட வீடியோ ஒன்றை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் மக்கள். ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடும் காட்சி. கதறுங்கடா போலி மதசார்பின்மை கபோதிகளா pic.twitter.com/di0cMbAIjV
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) September 21, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 ஆகஸ்ட் 22ம் தேதி zindadilkashmir எனும் எக்ஸ் பக்கத்திலும், jammu_24x7 எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. அதில், காஷ்மீரின் குஜ்ஜார் பகர்வால் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆகஸ்ட் 15ம் தேதி இந்துஸ்தானின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்தனர். நமது அரசாங்கத்தின் தேவையின் போது, நாட்டின் எல்லை பாதுகாப்பில் இராணுவத்துடன் துணை நிற்பதாக தெரிவித்தனர் என இடம்பெற்று இருக்கிறது.
Gujjar Bakarwal community of #Kashmir took an oath on #15August along with all its youth to protect the #constitution & #law of #Hindustan.
“Always standing for the security of the borders with the army of our country, whenever the country needs them”#JaiHind #IndianArmy… pic.twitter.com/T4UxFkoSgN
— zindadilkashmir (@jindadilkashmir) August 22, 2023
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழும் குஜ்ஜார் பகர்வால் பழங்குடியின மக்களின் எக்ஸ் பக்கத்தில், ‘ ஜம்மு மற்றும் காஷ்மீரின் குஜ்ஜார் பகர்வால்கள் தங்களின் பழங்குடியின அந்தஸ்து பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்து வருகின்றனர். பாதுகாப்பு படையுடன் இணைந்து எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்போம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர் ‘ என ஆகஸ்ட் 19ம் தேதி பதிவாகி இருக்கிறது.
जम्मू कश्मीर के गुर्जरबकरवाल अपनी अनुसूचित जनजाति की स्थिति की सुरक्षा के संबंध में अपने संवैधानिक अधिकारों को सुरक्षित रखने का संकल्प ले रहे हैं। उन्होंने सशस्त्र बलों के साथ देश को दुश्मनों से बचाने का संकल्प भी लिया।
जय हिन्द@rashtrapatibhvn @PMOIndia @MukhiyaJiGurjar pic.twitter.com/PVQ4KNOZ9X— Gurjar Bakarwal (@Gurjarbakarwal) August 19, 2023
சமீபத்தில், ஜம்மு காஷ்மீரில் பட்டியலினப் பிரிவில்(எஸ்டி) பஹாரிஸ் பிரிவு மக்களை சேர்ப்பதை குஜ்ஜார் பகர்வால்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களை ஒன்றிய அரசு திரும்ப பெறத் தவறினால் கால்நடைகளுடன் சாலையில் இறங்கி போராடுவோம் என மிரட்டல் விடுத்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய சபதம் எடுத்ததாகப் பரவும் தகவல் தவறானது. வீடியோவில் இருக்கும் மக்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த குஜ்ஜார் பகர்வால்கள் எனும் பழங்குடியின மக்கள். அவர்கள் தங்களது பழங்குடியின அந்தஸ்து தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.