பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் “மோடி மோடி” எனும் முழக்கம் எழுப்பப்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் இந்திய பிரதமர் மோடியின் பெயரை முழக்கமிட்டதாக கீழ்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் எம்பி ஷோபா உள்ளிட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்கள். இந்த வீடியோ குறித்து இந்தியா டிவி எனும் ஊடகம் வெளியிட்ட செய்தியே தமிழில் வைரலாகி கொண்டிருக்கிறது.
With his dedication, determination & vision for Bharat, PM @narendramodi
Ji have inspired the whole world not just India!See opposition of Pakistan parliament chanting “Modi Modi” against the ruling govt.
Massive embarassment for #ImranKhanpic.twitter.com/gbCOr6HCb1
— Shobha Karandlaje (@ShobhaBJP) October 29, 2020
Exclusive: Why some MPs in Pakistan parliament shouted ‘Modi, Modi’ #AajKiBaat @RajatSharmaLive pic.twitter.com/AZHeyDbKhc
— India TV (@indiatvnews) October 28, 2020
உண்மை என்ன ?
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே எப்பொழுதும் பகை போக்கு நிலவி வருகையில் இந்தியப் பிரதமரின் பெயரை பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் முழங்கி இருந்தால் இரு நாட்டின் பிரேக்கிங் நியூஸ் ஆக மட்டுமின்றி சர்வதேச செய்தியாகவும் உருவெடுத்து இருக்கும். ஆனால், வைரலாகும் வீடியோ குறித்து இந்திய அளவில் கூட முதன்மை செய்திகளாக வெளியாகவில்லை.
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய முழக்கம் என்னவென்று தெரிந்து கொள்ள தேடிப் பார்க்கையில், அக்டோபர் 26-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒளிபரப்பு செய்த Public news சேனல் வீடியோவில் 13.30வது நிமிடத்தில் இருந்து வைரல் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அதில், 13.30-வது நிமிடத்தில் ” Voting Voting ” என முழங்குவதை கேட்கலாம்.
கடவுள் வழிபாடு மற்றும் மதங்களை இழிவாக பேசுவது, எழுதுவதற்கு(blasphemy) எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தாக்கல் செய்யும் போது எதிர் தரப்பினர் “voting voting ” என முழங்கி உள்ளனர். அதற்கு சபாநாயகர் ” வாக்கு அளிப்பது நடைபெறும், அமைதியாக இருங்கள் ” எனப் பேசி இருக்கிறார்.
அக்டோபர் 26-ம் தேதி Dunya News எனும் சேனலில், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி உடைய உரை மட்டும் தனியாக வெளியாகி இருக்கிறது. ” NA unanimously adopts resolution against blasphemous sketches after noisy session ” எனும் தலைப்பில் நாடாளுமன்ற கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து Dawn.com வெளியிட்ட கட்டுரையில், எதிர் கட்சியினர் ” Voting Voting ” என கத்தியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
கூட்டத்தொடரில், இந்தியா உடைய கருத்துக்களை எதிரொலிப்பதாகவும், பிரதமர் மோடியால் செல்வாக்கு செலுத்துவதாகவும் எதிர்தரப்பினரை வெளியுறவு அமைச்சர் குற்றம்சாட்டி இருந்தார். அதன்பிறகு, மோடியின் நண்பராக இருப்பவர்கள் பாகிஸ்தானின் எதிரி என்ற வாசகங்களும் எழுப்பப்பட்டன.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என கத்தியதாக பரவி வரும் வீடியோவில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக வாக்கு எடுக்க வேண்டும் என ” Voting Voting ” என கத்தி உள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி மோடி என முழங்கியதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.