கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து கூறியதாகப் போலி ட்வீட்டை பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
காங்கிரசை தேர்ந்தெடுத்ததற்கு கர்நாடகா என்ன விலை கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை. சர்வதேச #SDPI தலைவர் காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் அந்த ட்டூவிட் தான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த மே 10 அன்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் காரணமாக பசவராஜ் பொம்மை தன்னுடைய முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அங்கு பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டுள்ளது என தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறி ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
காங்கிரசை தேர்ந்தெடுத்ததற்கு கர்நாடகா என்ன விலை கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை
சர்வதேச #SDPI தலைவர் காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்
அந்த ட்டூவிட் தான்
நீங்கள் கீழே பார்ப்பது… pic.twitter.com/5W43LspC2c— ஶ்ரீனிவாசன்🚩 (@Srinivasan790) May 13, 2023
காங்கிரசை தேர்ந்தெடுத்ததற்கு கர்நாடகா என்ன விலை கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை
சர்வதேச #SDPI தலைவர் காங்கிரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்
அந்த ட்டூவிட் தான் இது pic.twitter.com/65BqqQ3QC6
— jeyakumar (@jkmultiplus) May 14, 2023
இதை தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்பே பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக ட்வீட் ஒன்று கடந்த மே 7-ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.
அப்பதிவில் அவர் நடக்கவிருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள், இந்தியாவை 2047-இல் அடைய வேண்டும் என்கிற கனவு அப்போது தான் சாத்தியமாகும் என்று அவர் மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே பரவி வரும் புகைப்படங்கள் குறித்து, பாகிஸ்தான் பிரதமரான ஷேபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான CMShehbaz -இல் தேடியதில், கடந்த மே 13 அன்று அவர் காங்கிரஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து எந்த பதிவும் வெளியிடவில்லை என்பதையும், அன்று அவர் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
இதற்கு முன்பாக கடந்த மே 7 அன்று பதிவிட்டதாகக் கூறி பரவி வரும் ட்வீட் குறித்து தேடியதில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறி எந்த பதிவுகளும் அவர் பதிவிடவில்லை.
இதை சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தரவுகளை காப்பகப்படுத்தி ஆவணப்படுத்தும் socialblade எனும் இணையதளத்தில் மூலமும் உறுதிப்படுத்த முடிந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்களிலும் எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பும், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை சென்ற போதும், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் பாகிஸ்தான் கொடி இந்தியாவில் ஏற்றப்பட்டதாகக் கூறி வதந்திகள் பரப்பப்பட்டன. இதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி என வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தான் பிரதமரான ஷேபாஸ் ஷெரீப் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வாழ்த்துக் கூறியதாக பாஜகவினர் பரப்பும் ட்விட்டர் பதிவு போலியானது என்பதை அறிய முடிகிறது.