This article is from Aug 10, 2020

மரம் நடுவது இஸ்லாமிற்கு எதிரானது எனக் கூறி தவறாக பரவும் பாகிஸ்தான் வீடியோ !

பரவிய செய்தி

மரம் வளர்ப்பு திட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடங்கினார். நமாஸி மக்கள் அதை எவ்வாறு எதிர்க்கிறார்கள் என்று பாருங்கள். ஏனெனில் அது இஸ்லாம் மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

மரம் நடுவதே இஸ்லாம் மதத்திற்கு ஏதிரானது எனக் கூறி பாகிஸ்தான் நாட்டில் நடப்பட்ட மரங்களை மக்கள் பிடிங்கி எறியும் காட்சிகளை கொண்ட வீடியோ இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் முகநூல் குழுக்களில் கூட அவ்வீடியோ பகிரப்பட்டு வருவதை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | archive link 

உண்மை என்ன ? 

பாகிஸ்தானியர்கள் காலியான நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட மரங்களை எதற்காக பிடுங்கி எறிகிறார்கள் எனத் தேடுகையில், ” ஆகஸ்ட் 9-ம் தேதி thenews.com இணையதளத்தில் ” Locals uproot trees of PTI lawmaker’s plantation campaign in Khyber over land dispute ” எனும் தலைப்பில் வைரலாகும் வீடியோ தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் கைபரின் மாண்டி காஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

நிலப்பிரச்சனை தொடர்பாக கைபரில் பி.டி.ஐ சட்டமன்ற உறுப்பினர் இக்பால் அப்ரிடி என்பவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது நடப்பட்ட மரங்களை உள்ளூர்வாசிகள் பிடுங்கி உள்ளனர். பல மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த ஆண்களில் ஒருவர் கூறுகையில், மரம் நடும் திட்டத்தில் குடிமக்களின் ” தனிப்பட்ட நிலத்தில் ” பலவந்தமாக மரங்களை நட்டுள்ளனர் எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

இது குறித்து கைபர் துணை ஆணையர் மஹ்மூத் அஸ்லாம் கூறுகையில், ” சிபா பழங்குடியினருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு இருப்பதாகவும், அவற்றில் ஒரு குழு மரம் நடுவதற்கு அனுமதி அளித்ததாகவும், மற்றொரு குழு அவற்றை பிடுங்கி எறிந்ததாகவும் ” தெரிவித்ததாக வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

ஆகஸ்ட் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மரங்களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அவற்றின் ஓர் பகுதியாக கைபர் பகுதியில் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், நிலம் தொடர்பாக இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே மரத்தினை வேரோடு பிடுங்கி எறித்துள்ளனர். மரம் நடுவது நம்பிக்கைக்கு எதிரானதோ அல்லது மதத்திற்கு எதிரானதோ எனக் கூறி இச்செயலில் ஈடுபட்டதாக இந்திய சமூக வலைதளங்களில் கூறுவது தவறான தகவல். பழங்குடியினரின் ஒரு குழு மரம் நட துணை நின்றுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader