பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் பங்கேற்கக்கூடாது எனத் தாக்கியதாக வதந்தி !

பரவிய செய்தி

வாடிவாசல் பின்புறம் தலித் மாடுகள் பங்கேற்க்க கூடாது என்று அடித்து விரட்டும் சாதி வெறியர்கள். வாடி வாசல் முன்புறம் செய்தி காட்டும் ஊடகங்கள் பின்புறம் அவலங்களை காட்டவில்லை..

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது புறவாடியில் கொண்டு வரப்பட்ட தலித் சமூகத்தினர் காளைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 1 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

மூங்கில் கம்பைக் கொண்டு காளைகள் மற்றும் உரிமையாளர்களை ஒருவர் அடிப்பதும், சிறு பகுதியில் முந்திக் கொண்டு காளைகளை அழைத்து செல்பவர்களை காவல்துறையினர் அடிப்பது உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

உண்மை என்ன ?  

Advertisement

பாலமேடு ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தேடுகையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை கம்பால் தாக்கிய நபருக்கு எதிராக விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை போலீஸ் விசாரணையை நடத்தியும், அந்த நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி வி.பாஸ்கரன் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை ஜனவரி 20-ம் தேதி வீடியோ உடன் பதிவிட்டு இருக்கிறது.

Twitter link | Archive link 

இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட காவல்துறை ஜனவரி 19-ம் தேதி வெளியிட்ட விரிவான பத்திரிக்கை செய்தியில், ” மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு கடந்த 15.01.22 அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவ்விதம் டோக்கனுடன் வந்திருந்த காளைகளை முறையாக வரிசைப்படுத்தி வாடி வாசலுக்குள் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மேற்படி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உரிய டோக்கன் உடன் தன்னுடைய காளையுடன் வந்திருந்த மதுரை மாவட்டம் கீழ சின்னனம்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் பவுன் என்பவர் தன்னுடைய காளையை வரிசையில் நிற்க வைக்க முயன்ற போது அவருக்கு பின்னால் இருந்தவர்கள் அவரை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டதால் அங்கு ஏற்பட்ட சிறு நெரிசல் காரணமாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காளை மேற்படி பவுன் என்பவரின் காளை மீது கொம்பால் குத்தி உள்ளது. இதனால் மேற்படி பவுனின் காளைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பவுன் என்பவர் அங்கு நின்று இருந்த மற்ற காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் அங்கு இருந்த கம்பை எடுத்து தாக்கியுள்ளார். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உடனடியாக சென்று நிலைமையை சீர் செய்து வரிசைப்படுத்தினார்கள். இச்சம்பவத்தில் எந்தக் காளைக்கும் மற்றும் காளையின் உரிமையாளர் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. காயம்பட்ட பவுன் என்பவரின் காளைக்கு முதலுதவி செய்யப்பட்டு காளை வெற்றிகரமாக வாடி வாசலை கடந்து சென்றது.

இதில் சுமார் 702 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இருப்பினும் மேற்படி பவுன் என்பவர் காளைகளை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பின்பு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டியின் உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி பவுன் என்பவர் மீது பாலமேடு காவல்நிலையத்தில் பிரிவு 11 (1) (a) தமிழ்நாடு விலங்கு வதைச் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி பவுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டின் போது கூட்ட நெரிசலில் ஒரு காளை மற்றொரு காளையின் மீது கொம்பால் குத்தியதால் ஆத்திரம் அடைந்த காளையின் உரிமையாளர் கம்பால் மற்ற காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் தாக்கி இருக்கிறார். வைரல் செய்யப்படும் வீடியோவில் ஒரு நபரே கம்பால் தாக்குவது இடம்பெற்று இருக்கிறது. காளைகளை கம்பால் தாக்கிய பவுன் என்பவரின் மீது பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி தரப்பில் புகார் அளித்ததால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தலித் சமூகத்தினரின் மாடுகளை தாக்கியதாக வீண் வதந்தியை பரப்பி உள்ளனர். இதை ட்விட்டரில் பரப்பிய சிலர் தங்கள் பதிவுகளை நீக்கியும் வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், 2022 பாலமேடு ஜல்லிக்கட்டில் புறவாடியில் தலித் சமூகத்தினர் மாடுகளை பங்கேற்க விடாமல் தாக்கியதாகப் பரவும் தகவல் வதந்தியே. கூட்ட நெரிசலில் ஒரு காளையின் மீது மற்றொரு காளை கொம்பால் குத்தியதால் கோபமடைந்த காளையின் உரிமையாளர் பவுன்  என்பவர் கம்பால் மற்ற காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் தாக்கி இருக்கிறார். காளைகளை தாக்கும் வீடியோ வைரலாகியதால் அவரின் மீது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button