பாலஸ்தீனியர்கள் மேக்அப் போட்டு உலக நாடுகளை ஏமாற்றுவதாக பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனிய ஹமாஸ் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதை உலக நாடுகள் முழுவதும் நன்கு அறிவர். இஸ்ரேல்நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இருதரப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் காஸா பகுதியில் உள்ள கட்டிடங்களை குறி வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள், சர்வதேச ஊடகங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காஸாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டது போன்று போலியான இரத்தத்துடன் மேக்அப் செய்து உலக நாடுகளை ஏமாற்றுவதாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவை முழுவதுமாக பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குண்டுவெடிப்பில் சிக்கியது, இரத்தம் காயம் ஏற்பட்டது போன்று மேக்அப் செய்து கொள்கிறார்கள். ஆனால், அனைவரும் கலைஞர்கள் படப்பிடிப்பிற்கு தயாராகுவது போன்று தோன்றுகிறது.
இவ்வீடியோ Gaza Post சேனலில் 2017ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. தற்போது பரவும் காட்சிகள் அனைத்தும் இவ்வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. வீடியோ தொடங்கிய 20 நொடிகளில் ” Special Effect – Makeup ” என அங்கு மேக்அப் செய்பவர்களின் உடையில் இருப்பதை காணலாம்.
2017-ல் TRT World எனும் சேனலில் ” பாலஸ்தீனிய சினிமா தொழில் ” என வைரல் செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்விரு வீடியோக்களிலும் அங்கு பணியாற்றும் தொழில் கலைஞர்கள் அளிக்கும் பேட்டி இடம்பெற்று இருக்கிறது.
காஸா பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்விதமான பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை கட்டுவதற்காக சினிமா கலைஞர்கள் மேக்அப் செய்து கொள்ளும் காட்சிகளே இவை.
முடிவு :
நம் தேடலில், 4 ஆண்டுகளுக்கு முன்பு காஸா சினிமா கலைஞர்கள் மேக்அப் செய்யும் வீடியோவை எடுத்து பாலஸ்தீனிய மக்கள் உலக நாடுகளை ஏமாற்றுவதாகவும், இஸ்ரேல் மீது பழிசுமத்துவதாகவும் கூறி தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.