பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அபராதமா ?

பரவிய செய்தி
பான் கார்டையும், ஆதார் கார்டையும் மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டுகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என வருமான வரித்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. அவ்வாறு செயலிழந்து போகும் பான் கார்டுகளின் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் வங்கி பயன்பாடு தொடங்கி பல்வேறு விசயங்களுக்கு ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்கள் தங்களின் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த வருடம் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இறுதி நாட்கள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவிட்டால் பான் கார்டு செயல்படாமல் போவது மட்டுமில்லாமல், செயல்படாத பான் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.10,000 வரை அபாரதம் விதிக்க வாய்ப்புள்ளதாக வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.
வருமானவரி சட்டம் 272பி பிரிவின் கீழ், ஒரு நபர் தவறான / செயல்படாத பான் கார்டை பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பிறகு பான் கார்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். ஆகையால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து பான் கார்டு சேவை ரத்து ஆவதை தடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 307.5 மில்லியன் பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 175.8 மில்லியன் பான் எண்கள் இணைக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
எளிதாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க செய்ய வேண்டியவை :
- முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும் (லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது).
- Quick links என்பதன் கீழ் உள்ள link Aadhaar கிளிக் செய்யவும்.
- திரையில் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பி இணைத்துக் கொள்ளலாம்.
- முன்பே இணைக்கப்பட்டு இருந்தால், அது குறித்த தகவலும் காண்பிக்கும்.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால் ரத்து செய்து விடுவார்கள், அபராதம் செலுத்த சொல்கிறார்கள் என பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது எளிதான காரியமே.
உங்கள் மொபைலில் மேற்க்கூறியது போன்று லிங்கில் சென்று ஆதார் எண், பான் எண்ணை எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இந்த தகவலை உடனடியாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.