உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் உள்ள மிதிவண்டி சிற்பமா ?

பரவிய செய்தி
உறையூர் சூர ஆதித்த சோழனால் கட்டப்பெற்ற பஞ்சவர்ணசாமி திருக்கோயில் சிற்பம். மிதிவண்டி இல்லாத காலத்தில் மிதிவண்டியை செதுக்கியவன் தமிழன்.
மதிப்பீடு
விளக்கம்
திருச்சி அருகே உள்ள உறையூரில் சூர ஆதித்த சோழனால் கட்டப்பட்ட பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டு இருப்பதாக புகைப்படமொன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் உள்ளதாக பரப்பப்படும் சிற்பத்தில், நவீன மிதிவண்டியை ஒருவர் இயக்குவது போன்றும், அந்த மிதிவண்டியின் சக்கரத்தில் பூ வடிவில் செடியுடன் செதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்த சிற்பத்தில் இருக்கும் நபர் தலையில் தொப்பியுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளார்.
ஆக, அந்த சிற்ப வேலைப்பாடுகள் மிகப் பழமையானவை போல் இல்லை. முதன் முதலில் 1817-ம் ஆண்டில் ஜெர்மனியில் மிதிவண்டியை கண்டுபிடித்து உள்ளனர். ஆகையால், அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில், அவை இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, இந்தோனேசியாவைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.
இச்சிற்பம் இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ” Pura Meduwe Karang ” எனும் கோவிலில் இடம்பெற்று உள்ளது. பாலி லோக்கல் கெய்டு எனும் இணையதளத்தில் மிதிவண்டி சிற்பத்தின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. இணையத்தில் Meduwe karang எனும் வார்த்தைகளை கொண்டு தேடினால் ஒருவர் மிதிவண்டியை இயக்கும் சிற்பமே முதன்மையாக வருகிறது.
1890-களில் Meduwe karang கோவில் கட்டப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 1904-ம் ஆண்டில் டச்சு கலைஞர் ஒருவர் அக்கோவிலின் சுவற்றில் மிதிவண்டியின் சிற்பத்தை செதுக்கியதாக lonelyplanet எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆக, இச்சிறப்பம் நூறு ஆண்டுகள் பழமையானது மட்டுமே.
மேலும் படிக்க : சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே திருச்சி பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் 1300 முதல் 1500 ஆண்டுகள் பழமையான மிதிவண்டியில் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு புகைப்படம் வைரல் செய்யப்பட்டது. மேலும், அதே புகைப்படம் கடந்த ஆண்டில் இந்திய அளவில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த சிற்பம் தொடர்பாக யூடர்ன் தரப்பில் கோவிலுக்கு நேரில் சென்று விசாரித்து கட்டுரை மற்றும் வீடியோ வெளியிட்டு இருந்தோம்.