லூபோ நிறுவனம் குழந்தைகள் சாப்பிடும் கேக்கில் மாத்திரை வைத்து விற்பனை செய்வதாகப் பரவும் மத வதந்தி!

பரவிய செய்தி
மதவெறி கொண்ட ஜிஹாதிகள் தயாரித்த புதிய கேக் சந்தைக்கு வந்துள்ளது. குழந்தைகளை முடக்கும் கேக்கிற்குள் லூபோ நிறுவனம் டேப்லெட்டை வைத்துள்ளது, தயவுசெய்து இந்த வீடியோவை இந்து பகுதியில் விற்கப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
முஸ்லீம்கள் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாகவும், பாப்கார்னில் உப்பிற்கு பதில் சிறுநீர் கலப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் வீடியோக்கள் மற்றும் செய்திகளை வலதுசாரிகள் வைரலாகப் பரப்பி வருவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், “மதவெறி கொண்ட ஜிஹாதிகள் தயாரித்த புதிய கேக் சந்தைக்கு வந்துள்ளது. குழந்தைகளை முடக்க கேக்கிற்குள் லூபோ நிறுவனம் மாத்திரைகளை வைத்துள்ளது, தயவுசெய்து இந்த வீடியோவை இந்து பகுதியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.” என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
மதவெறி கொண்ட ஜிஹாதிகள் தயாரித்த புதிய கேக் சந்தைக்கு வந்துள்ளது. குழந்தைகளை முடக்கும் கேக்கிற்குள் லூபோ நிறுவனம் டேப்லெட்டை வைத்துள்ளது, தயவுசெய்து இந்த வீடியோவை இந்து பகுதியில் விற்கப்படும் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.🔥 உங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள் இ pic.twitter.com/t8CkyQ7I30
— Ganapathy (@KG94420) July 22, 2023
இதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் விவாதிக்குமா💥
மதவெறி கொண்ட ஜிஹாதிகள் தயாரித்த புதிய கேக் சந்தைக்கு வந்துள்ளதாம்💥
குழந்தைகளை கவரும் கேக்கிற்குள் லூபோ நிறுவனம் டேப்லெட்டை வைத்துள்ளதாம்💥
எந்த அளவிற்கு முட்டாள் தனமாமாக தரம் தாழ்ந்து அடுத்த தலைமுறையையே அழிக்கும் நோக்கம் 💥 pic.twitter.com/w3dYvJb2iZ
— 2024 is our MISSION (@esanindia1965) July 21, 2023
52 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், லூபோ-வின் நீல நிற கேக் பாக்கெட்டை கிழித்து, கேக்கை இரண்டாக பிரித்து காட்டுவது போலவும், அதில் இரண்டு வெள்ளை நிற மாத்திரைகள் இருப்பது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2020-இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. மேலும் அதில் “சீன நிறுவனமான லூபோ வெளியிட்டுள்ள கேக்கில் குழந்தைகளுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலக்கப்பட்டிருக்கின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, Wishe press என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2019 அக்டோபர் 28ம் தேதி “துருக்கிய கேக்கில் மாத்திரைகள் ” எனும் தலைப்பில் விளக்க வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவின் 46வது வினாடியில் அந்த நபர், ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் பேசப்படும் குர்திஷ் மொழியான “சொரானி” மொழியில் பேசியுள்ளார் என்பதையும் அரேபிய ஊடகமான Teyit உறுதி செய்துள்ளது.
மேலும், வீடியோவின் Playback Speed-ஐ 0:25 என்ற வேகத்திற்கு குறைத்து ஒவ்வொரு ஃபிரேமாக ஆய்வு செய்து பார்த்ததில், கேக்கை கவரில் இருந்து எடுத்ததற்கு பின்பு, அதை இரண்டாக பிரிப்பதற்கு முன்பே அந்த கேக்கில் சிறிய ஓட்டை இருப்பதைக் காண முடிந்தது.
லூபோ கேக் தொடர்பாக மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த கேக் Solen என்ற துருக்கிய நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
வைரல் ஆன வீடியோவிற்கு மறுப்பு தெரிவித்துள்ள Solen நிறுவனம், தனது உணவுப் பொருட்களின் செய்முறை ஆய்வுக்கான முடிவுகளையும் வெளியிட்டுள்ளதாக Teyit ஊடகம் தன்னுடைய பக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Solen நிறுவனம் ஈராக் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் என்பதையும், இந்த லூபோ கேக் அங்கு மட்டும் தான் விற்கப்படுகிறது. எனவே இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது. ஆனால் வீடியோவில் உள்ளவர், குர்திஷ் மொழியான “சொரானி” மொழியில் பேசியிருந்தாலும், ஈராக்கின் எந்த பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: சந்தைக்கு வந்துள்ள புதிய கேக்குகளில் ஆபத்தான மாத்திரைகளா ?| உண்மை என்ன?
இதற்கு முன்பும் இந்தியாவில் லூபோ நிறுவனம் கேக் மற்றும் பிஸ்கெட்களில் மாத்திரைகள் வைத்து விற்பதாக தவறாக செய்திகள் பரவின. இவை ஈரானின் எல்லையோர சிஸ்டன் மற்றும் பாலுஸ்தான் மாகாண பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கேக் மற்றும் பிஸ்கெட்கள் என்பதையும் நாம் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், பக்கவாத மாத்திரைகளை வைத்து குழந்தைகள் சாப்பிடும் கேக் தயாரிக்கும் ஜிகாதிகள் எனப் பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோ கடந்த 2019ல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாக பரவி வருகின்றது என்பதை அறிய முடிகிறது.