பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லையா?| உச்ச நீதிமன்ற உத்தரவா?

பரவிய செய்தி
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் சொத்துக்களில் உரிமை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி.
மதிப்பீடு
விளக்கம்
பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு , பெற்றோரின் சொத்துக்களில் பங்கில்லை என்ற அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளதாக நீண்ட காலமாகவே ஒரு நியூஸ் கார்டு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் சொத்துக்களில் உரிமை இல்லை..!
-உச்சநீதிமன்றம்நான் பெருசா நினைக்கிற சொத்தே என்ற அப்பா தான்னு சூரிய வம்ச சின்ராசு மாதிரி போயிற வேண்டியது தான் இனி.
— My World Cricket (Ucfc) (@saravananucfc) August 2, 2018
” பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் சொத்துக்களில் உரிமை இல்லை..! -உச்சநீதிமன்றம் ” அறிவிப்பு என 2018-ல் அதிகம் பதிவாகியதை பார்க்க முடிந்தது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவா ?
பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லை என பரவும் செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். அதில், அது தொடர்பான செய்திகளோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்போ பதிவாகவில்லை.
மாறாக, 2017-ல் பதிவுத் துறை வெளியிட்ட சுற்றிக்கையின் படி, இந்து திருமணங்களை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டன. அதில், மணமக்கள் தரப்பில் இருந்து , பெற்றோர் மற்றும் சாட்சியாளர்களின் அசல் அடையாள அட்டை தேவை எனக் குறிப்பிட்டு இருந்தனர். பெற்றோரின் அனுமதி குறித்து தெரிவிக்கவில்லை என்றாலும், பெற்றோர்களின் அசல் அடையாள அட்டை கேட்கப்பட்டு உள்ளது.
ஆனால், 2018-ல் திருமண பதிவுகளுக்கு பெற்றோரின் ஆவணங்கள் தேவையில்லை என பதிவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதேபோன்று, 2017 ஜனவரியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் யாருக்கும் கிடையாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அதிரடியாக அறிவித்து இருந்தது.
நியூஸ் கார்டு :
பாலிமர் செய்திகள் நியூஸ் கார்டு பெயரில் வெளியான பதிவுகள் கடந்த 2018-ல் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன . ஆனால், அது தொடர்பான செய்திகள் ஏதுமில்லை . பாலிமர் செய்தியின் முகநூல் பக்கத்திலும் அவ்வாறான செய்திகளை காணவில்லை.
2018-ல் பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டுகளுடன் வைரலாகும் நியூஸ் கார்டை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது எழுத்து வடிவம் வேறாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
நம்முடைய தேடலில், பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் கிடைக்கவில்லை. சம்மந்தப்பட்ட பாலிமர் செய்தியிலும், செய்திகள் இடம்பெறவிலை.
மாறாக, முகநூல், ட்விட்டர், ஷேர் சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.